பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமேயில்லை. இது செயல்பாட்டிற்கான நேரம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி தெரிவித்துள்ளதால் இரு நாட்டுகளின் எல்லையில் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது. 

இந்திய வந்துள்ள அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மேக்ரியுடன் இணைந்து டெல்லியில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது புல்வாமா தாக்குதல் குறித்து பேசிய அவர், ’’உலக அமைதிக்கும், உறுதிக்கும், பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளோம். பாகிஸ்தானுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த அவகாசம் முடிவுக்கு வந்து விட்டது, புல்வாமா தாக்குதல் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை, இது செயலில் இறங்குவதற்கான நேரம். ஒட்டு மொத்த உலகமும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குவதும், அதனை ஆதரிப்பதுதான். மனித குலத்தைக் காக்க பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சொகைல் முகமது டெல்லியிலிருந்து பாகிஸ்தான் சென்றுள்ளார். காஷ்மீரில் நிலவி வரும் பதற்றமான சூழலையடுத்து, தமது தூதரை அவசர ஆலோசனைக்கு பாகிஸ்தான் அழைத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் உருவாகி உள்ளது.இரண்டு நாட்களுக்கு முன் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் பாகிஸ்தான் மீதான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக இந்தியா வந்தார். இந்த தற்கொலை படை தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை உடனே இஸ்லாமாபாத் திரும்ப பாகிஸ்தான் உத்தரவிட்டது. பாகிஸ்தான் அரசின் உத்தரவை அடுத்து, பாகிஸ்தான் தூதர் சொகைல் முகமது அவசர ஆலோசனைக்காக  டெல்லியிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.