முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்து விட்டது. இந்த ஒரு மாதத்தில் அப்போலோ மருத்துவமனை வளாகம் மினி வாசஸ்தலமாக மாறிவருகிறது. முதல்வர் நலமடைய வேண்டி தொண்டர்கள் குவிந்து கிடக்கின்றனர். அப்போலோ மருத்துவமனை வாசல் சர்வமத பூஜை மடமாக மாறி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 போரூர் சாமியார் அன்பரசு பூசணி, தேங்காய் சாமந்திப்பூ வைத்து பூஜை செய்தார். அதன் பின்னர் சேலம் அழகாபுரம் ஜெயந்தி சாமியார் சூலாயுதத்துடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் அலேலுயா சபை சார்பிலும், இஸ்லாமியர்கள் சார்பிலும் பூஜைகள் , பாத்தியாக்கள் , பிரார்த்தனைகள் செய்யும் கூடமாக அப்போலோ நுழைவு வாயில் மாறிப்போனது. பிரியாணி சோறு சாப்பிட்ட தொண்டர்களும் அங்கு நேர்த்திக்கடன் செய்தனர்.

நேற்று காசி விஸ்வநாதர் கோவில் பிரதான பூசாரி ஓம் ஆச்சாரி பிரசாதத்துடன் வந்து முதல்வரை பார்த்தார்.முன்னாள் பேராயர் சின்னப்பா உள்ளிட்டோர் வந்தனர். தினம் தினம் கட்சிக்காரர்கள் அப்போலோ வாயிலில் பூஜை செய்வதும் தேங்காய் உடைப்பதுமாக அப்போலோ தெய்வீக ஸ்தலமாக மாறிப்போனது.

இந்நிலையில் இன்று அப்போலோ வந்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதுதான் அப்போலோவில் பிரதிஸ்டை செய்யப்பட்ட அம்மனின் அலங்கார சிலை. தென்சென்னை மாவட்ட மகளிர் அணி தலைவி சரோஜினி சீனிவாசன் தலைமையில் 3 அடி உயர துர்கை அம்மனை அப்போலோ வாசலில் பிரதிஸ்டை செய்து பூஜை செய்தனர்.

இதை அந்த வழியாக வந்த பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பார்த்து பரவசமாகி வணங்கினர். தற்காலிகமாக அம்மன் சிலை நிறுவ பட்டாலும் முதல்வர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை இருக்கும் என தெரிகிறது.