telangana youth sent cheque for 9 paise to prime minister modi

பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப, மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றம் செய்யப்பட்டு வந்தது. இந்த முறையை கைவிட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலை மாற்றப்பட்டது.

கடந்த சில தினங்களாக, தினமும் அதிகமாகிக்கொண்டே வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது புதிய உச்சத்தை எட்டியது. கர்நாடக தேர்தலுக்காக சில நாட்கள் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. தேர்தல் முடிந்ததும் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. கர்நாடக தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியது. 

அதன்பிறகு பைசாவில் விலை குறைந்தது. அண்மையில், தெலுங்கானாவில் பெட்ரோல் விலை 9 பைசா குறைந்தது. பைசாக்களில் விலை குறைப்பு செய்வதால் அதிருப்தியடைந்த இளைஞர் ஒருவர், அந்த 9 பைசாவை பிரதமர் மோடிக்கு காசோலையாக அனுப்பி வைத்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் சாந்து கோவத், மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்திற்கு சென்றுள்ளார். 9 பைசாவுக்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து, அது பிரதமருக்கு அனுப்புமாறும், பிரதமருக்கு சென்று சேர்ந்துவிட்டதை உறுதி செய்யுமாறும் தெரிவித்துள்ளார்.