சென்னையில் இரு பத்திரிகையாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை அரசாங்கமும், மற்றவர்களும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 1,400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர். சென்னையில் இரண்டு பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.


”கொரோனா வைரஸ் நோய் பாதிப்பிலிருந்து அனைவரும் விடுபட வேண்டும் என்று நாம் எல்லாம் வேண்டிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் பணி நிமிர்த்தமாக பணியாற்றிக்கொண்டிருந்த இரண்டு பத்திரிக்கைச் சகோதரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தி மனதுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது . ஆனாலும், அவர்கள் மனம் தளர வேண்டாம். மன உறுதியோடு எதிர்கொண்டு கொரோனா வைரஸ் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வருவார்கள். 


ஆனாலும் பத்திரிக்கைச் சகோதரர்களுக்கு பாதுகாப்பை அரசாங்கமும்,மற்றவர்களும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஏனென்றால் பத்திரிக்கைச் சகோதரர்களும் இந்த கொரோனா பாதிப்பு களப்பணியில் முன்னின்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தளர்வில்லாமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களையும் பாதுகாக்க வேண்டியது நாம் அனைவரின் கடமை.” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.