வகுப்பில் செல்போன் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வரும் கல்வி ஆண்டில் 600 அரசு பள்ளிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அடல் லேப் திட்டம் தொடங்கப்படும். இந்தியாவிலேயே கல்வித்துறையில் தமிழகம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளிக்கூடங்களில் ‘கியூஆர்’ கோடு மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்த தொடங்கி உள்ளனர் என்றார்.

 

மேலும் பள்ளியில் துப்புரவு பணியாளர் பற்றாக்குறை உள்ளதால், ரோட்டரி கிளப் மூலம் நவீன கழிப்பறை சுத்தம் செய்யும் வாகனம் வாங்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். இந்த பணியை அரசு அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

புதிய பாடத்திட்டம் கூடுதல் பணிச்சுமையாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 12 ஆண்டுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மாணவர்கள் அறிவுத்திறன் மேம்படுத்தப்படும். க்யூ.ஆர்.கோடை பயன்படுத்தும் போது மட்டுமே ஆசிரியர்கள் செல்போனை பயன்படுத்த வேண்டும்.

மேலும் அதை தவிர்த்து வகுப்பில் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தெரிந்தால், சமந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கல்விதுறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் செங்கோட்டையன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.