10 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் கேட்பதால் தொடரும்  முறைகேடுகளைத் தடுக்க மதிப்பெண் சான்றிதழ் முறையை ரத்துசெய்து கிரேடு முறையில் மாற்றுசன்றிதழ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் 
மாநிலத்தலைவர் பி.கே. இளமாறன் வெளியிட்டுள்ள  அறிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது :- கொரோனா வைரசிலிருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் தமிழக அரசு மாணவர்களை காப்பாற்றும் பொருட்டு மாணவர்களின் நலன்கருதி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளிள் வேண்டுகோளினை ஏற்று 2019-2020 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை ரத்துசெய்து மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கிய மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது.

 

மேலும் தேர்வு மதிப்பெண் கணக்கீடுசெய்வதில் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளதால், சில தனியார்பள்ளி நிர்வாகிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், மாணவர்களை அழைத்து காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை மீண்டும்  எழுத வைப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.  தனியார் பள்ளிகளின் இதுபோன்ற நடவடிக்கைகள்  மிகுந்த வேதனையளிக்கிறது. அரசு விடைத்தாள்கள் கேட்பதன் விளைவாகவே இது போன்ற நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுகின்றனர். எனவே விடைத்தாள்கள் கேட்பதை கைவிட்டு கிரேடு முறையில் மாற்றுசன்றிதழ் வழங்க வேண்டும்.  அதேபோல்,  மதிப்பெண் சான்றிதழ் முறையால் காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளில் தேர்ச்சிபெறாத மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதிலும் சிரமங்கள் உள்ளன. அனைவருக்கும் தேர்ச்சியளிக்கப்பட்டபிறகு விடைத்தால் கேட்பது போன்ற இந்த நடைமுறைகளை தவிர்ப்பது நல்லது. மேலும் இதுபோன்ற பணிகள் மூலம் கொரோனா தொற்றும் அதிகம் பரவும் சூழல் உள்ளது. அரசுபள்ளிகளில் EMIS மூலமாக அனைத்து பதிவுகளும் ஏற்றப்பட்டுள்ளது. 

தனியார்பள்ளிகளில்  EMIS மூலம் மதிப்பெண்கள் பதியபட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே. எனவே இதுபோன்ற சூழலில் மதிப்பெண் எப்படி வழங்கப்படும் என்று மாணவர்கள்,பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. ஆகையால் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் முறையை ரத்துசெய்து மாற்றுச்சான்றிதழிலேயே கிரேடு முறை வழங்க ஆவனசெய்யலாம். இதன்மூலம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை நிரந்தரமாக ரத்துசெய்வதோடு  11 ஆம் வகுப்பிற்கு  பாடங்களை தேர்வுசெய்யும்போது   பள்ளி அளவில் சிறு நுழைவுத்தேர்வு நடத்தி அதன் மூலம் தேர்வுசெய்யலாம். தற்போது  மதிப்பெண் கூடுதலாக வழங்குவதற்கு மறு தேர்வு, மற்றும் பணம்  என பலவகையில் வணிகநோக்கத்தோடு சில கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கு முற்றுபுள்ளி வைத்திடவும், மாணவர்கள்-பெற்றோர்களை மனஉளைச்சலிலிருந்து விடுவிக்கும் பொருட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதை ரத்துசெய்து மாற்றுச்சான்றிதழில் கிரேடு வழங்க ஆவனசெய்யும்படி மதிப்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன். என அதில் கூறப்பட்டுள்ளது.