மகாராஷ்ட்ரா  முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் அலுவலகத்தில்  இந்த ஆண்டில் மட்டும் 3 கோடியே 34 லட்சம் ரூபாய் டீ செலவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மகாராஷ்ட்ரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் அலுவலகத்தில் டீ மற்றும் நொறுக்குத்தீனி என்ற அடிப்படையில், இந்த ஆண்டு அதாவது 2017 – 2018 ஆம் ஆண்டில்  3 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த  2015–16–ம் நிதியாண்டில் டீ செலவு 58 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 3 கோடியே 34 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஆனால் நடப்பாண்டில் டீ செலவுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவு செய்யப்பட்டு இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. நாள்தோறும் முதலமைச்சர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் டீ குடிப்பதாக கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும்  காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

கிரீன் டீ, லெமன் டீ என்பதையெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் முதலமைச்சர் பட்னவிஸ்  குடிப்பது எந்த வகை டீ?. அது என்ன கோல்டன் டீயா? என கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் தலைவர்கள், மாநிலம் முழுவதும் விவசாயிகள் செத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சரின்  அலுவலகத்தில் டீ செலவு இந்த அளவு உயர்ந்து இருப்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்..