2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றன. ஆனால் கடந்த ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்து விலகிய தெலுங்கு தேசம் கட்சியின்  தலைவர் சந்திரபாபு நாயுடு, பாஜக ஆட்சியை வீழ்த்த பல வழிகளில் முயற்சி மேற்கொண்டார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என காரணம் காட்டி பாஜகவுடனான உறவை சந்திரபாபு நாயுடு முறித்துக் கொண்டார்.

இதையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் படு தோல்வி அடைந்தது. சட்டமன்றத் தேர்தலில் ஜெகன் மோகன்  அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.

மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அக்கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் வெங்கடேஷ், சுஜானா சௌத்ரி ஆகியோர் பாஜகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேச  கட்சியின் 3 எம்.பிக்களும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.