அண்மைக்காலமாக கார், பைக், கனரக வாகனம் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிந்துவருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து, தங்களின் தொழிற்சாலைகளுக்கு மூடு விழா நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் முயற்சியாக கோவா மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை பதிவு செய்யப்படும் புதிய வாகனங்களுக்கு சாலை வரியை 50% குறைக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

கோவா மாநில கார் விற்பனை டீலர்கள் கார் விற்பனையில் சரிவு ஏற்படும் என எச்சரிக்கை தெரிவித்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


கடந்த மாதம் புதிய சொகுசு வகுப்பு வாகனங்களுக்கு சாலை வரியில் 50% தள்ளுபடி செய்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. தற்போது அனைத்து வாகனங்களுக்கு சாலை வரி குறைத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது