அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு ஆதரவளித்தற்காக தொலைபேசியில் தன்னை சிலர் மிரட்டியதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா அணி ஓ.பி.எஸ் அணி என இரண்டாக பிரிந்தது. இதையடுத்து ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக சில அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் முன்னாள் அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வந்தனர்.

மேலும் ஓ.பி.எஸ்க்கு ஏராளமான பொதுமக்கள் ஆதரவு இருந்தால் இத்தகைய கருத்து தொகுதி வாசிகளிடையே வரவேற்கப்பட்டது.
இதனிடையே சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற குழு தலைவராக நியமிக்கபட்டார்.
பின்னர், பொதுமக்களும், இளைஞர்களும், நெட்டிசன்களும் அனைத்து எம்.எல்.ஏக்களின் தொலைபேசி எண்களை கண்டறிந்து ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளிக்குமாறு எம்.எல்.ஏக்களை வலியுறுத்தினர்.
ஆனால் எம்.எல்.ஏக்கள் சிலர் தொகுதிவாசிகளை திட்டிவிட்டு செல்பேசி இணைப்பை துண்டித்து விட்டனர்.
ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று கொண்டது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்திருந்ததால் அதற்கான சிறப்பு சட்டபேரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு அமளிகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்ததாக சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த தொகுதிவாசிகளும் பொதுமக்களும் எம்.எல்.ஏக்கள் மேல் கடும் கோபத்தில் இருக்கின்றனர். பல்வேறு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி அவர்களின் படத்தை துடைப்பத்தால் அடித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொகுதி பக்கம் வரகூடாது என பல மிரட்டல்களும் எம்.எல்.ஏக்களுக்கு வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு ஆதரவளித்தற்காக தொலைபேசியில் தன்னை சிலர் மிரட்டியதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சிலர் தொலைபேசியில் ஒரு வாரமாக என்னை மிரட்டி நிம்மதியை கெடுத்து வருகின்றனர்.
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறாய். ஏன் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டீர்களா? என தொலைபேசியில் மிரட்டுகின்றனர்.
தமிழ்நாட்டிலிருந்து மட்டுமில்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார்கள்.
தனக்கு மட்டுமின்றி எதிர்காலத்தில் பொது வாழ்வில் ஈடுபடும் எந்த பெண்ணையும் இப்படி கேவலபடுத்தக் கூடாது.
தனக்கு மிரட்டல் வந்த தொலைபேசி எண்கள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையிடம் கொடுத்துள்ளேன்.
இதுதான் ஜனநாயகமா என கேள்வி எழுப்பினார் சி.ஆர்.சரஸ்வதி.
