சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழலை தவிர்க்க அதிமுக புதுக்கணக்கு போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி நீடிக்குமா என்பது தான் தற்போதைய தமிழக அரசியலில் மில்லியன் டாலர் கேள்வி. பெரியார், அண்ணா சிலைகள் மீது காவிக் கொடி, காவிச் சாயம் பூசப்பட்ட விவகாரத்தில் அதனை அவமதிப்பு என்று கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகளை பாஜக ரசிக்கவில்லை என்கிறார்கள். காவி நிறம் என்ன அவமானமா? என்பது தான் பாஜக தரப்பின் கேள்வியாக உள்ளது.

இதே போல் பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் கைதான இளைஞர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது பாஜக தரப்பை ஆத்திரமூட்டியுள்ளது என்கிறார்கள். இந்த விவகாரத்தில் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் நேரடியாகவே அதிமுக அரசை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். அதே சமயம் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் இந்த விவகாரத்தில் அமைதி காக்கிறார்கள். இதற்கு காரணம் பாஜகவிற்கு எதிராக யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்கிற மேலிட உத்தரவு உள்ளது. அதையும் மீறி எம்ஜிஆர் சிலைக்கு காவிச் சாய விவகாரத்தில் கோவை செல்வராஜ் பேசிய பேச்சு பாஜகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மேலும் தொடர்ந்து காவி வண்ணத்திற்கு எதிரான கருத்துகளை அதிமுகவின் இணையதள ஆதரவாளர்கள் மத்தியில் பார்க்க முடிகிறது. அதே போல் பாஜக கூட்டணியில் இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என்றும் அதிமுகவிற்காக இணையதளங்களில் களமாடும் பலரும் வெளிப்படையாக கூற ஆரம்பித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தயவு தேவை, ஆனால் சட்டமன்ற தேர்தலில் பாஜக நமக்கு சுமை தான் என்று அதிமுக மேலிடத்தலைவர்கள் தொடர்ந்து கட்சியில் அதிகாரமிக்க நபர்களிடம் கூறியே வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை தொடர்ந்தால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்றும் அவர்கள் கருதுகின்றனர். அதோடு கடந்த தேர்தலை போல மூன்றாவதாக ஒரு அணி உருவானால் அது திமுகவின் வாக்கு வங்கியை பாதிக்கும், அரசுக்கு எதிரான வாக்குகள் சிதறி அதிமுகவிற்கு சாதகமாகும் என்றும் அதிமுக கணக்கு போடுகிறது. அந்த வகையில் கடந்த தேர்தலை போல இந்த முறையும் 3வது அணியை உருவாக்க முடியுமா? என்றும்  அதிமுக தரப்பு யோசித்து வருகிறருது.

3வது அணி உருவானால் தேமுதிக யோசிக்காமல் சென்று சேர்ந்துவிடும், இவர்கள் தவிர கிருஷ்ணசாமி போன்ற சின்ன சின்ன கட்சிகளை சேர்த்து அவர்களுக்கு தலைமையாக ஒரு பிரபலத்தை நிற்க வைத்தால் புதிய வாக்காளர்கள் மற்றும் அரசின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள் வாக்குகள் திமுகவிற்கு செல்லாமல் தடுக்க முடியும் என்கிற கணக்கை அதிமுக போடுகிறது. இதற்கு பாஜக தலைமை ஏற்றால் தான் சரியாக இருக்கும் என்பதால் அதிமுக தனது கூட்டணியை முறித்துக் கொள்வதை பற்றி பரிசீலிக்கும் என்கிறார்கள்.

தற்போது கூட்டணியில் இருந்து விலகினால் ஆட்சியை தொடர்வதில் சிக்கில் ஏற்படும் என்பதால் தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில் இதுபோன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த அதிமுக தயாராக இருக்கும் என்று கூறலாம். இதற்கு அதிமுகவில் ஒரு சிலரை தவிர பெரும்பாலானவர்கள் ஆதரவாகவே இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.