தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கான டெண்டரை டாடா நிறுவனம் கைப்பற்றி உள்ளது.  மொத்தம் ரூ.861.90 கோடியில் புதிய நாடாளுமன்ற வளாகம் அமைய உள்ளது.

மத்திய அரசின் பொதுப்பணித் துறை இந்த வளாகம் கட்டுவதற்கு ரூ. 940 கோடி செலவாகும் என மதிப்பிட்டிருந்தது. அதைவிட குறைவாக டெண்டர் கேட்பு மனு தாக்கல் செய்த டாடா நிறுவனத்துக்கு நாடாளுமன்ற வளாகம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

புதிய கட்டிடத்தை டாடா புராஜெக்ட் நிறுவனம் கட்ட உள்ளது. லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் தனது டெண்டர் கேட்பு மனுவில் ரூ. 865 கோடி குறிப்பிட்டிருந்தது. அதைவிட குறைவான தொகை கோரியிருந்ததால் டாடா புராஜெக்ட் நிறுவனத்துக்கு இத்திட்டப் பணியை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்த புதிய கட்டிடம் கட்டப்படும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 1,350 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கை வசதி செய்வதற்கு ஏற்றதாகவும், முக்கோண வடிவிலும் இந்த கட்டிடம் அமைய உள்ளதாக தெரிகிறது. இந்த புதிய நாடாளுமன்றத்தின் மாதிரி வரைபடங்களை அகமதாபாத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று தயார் செய்தது. இந்நிலையில், நாடாளுமன்றம் கட்டும் ஒப்பந்தத்திற்கான டெண்டரில் டாடா புரொஜெக்ட்ஸ் நிறுவனம், எல் அண்ட் டி உள்ளிட்ட பல முன்னணி இந்திய நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில், 861 கோடியே 90 லட்சத்துக்கு டெண்டர் கோரியிருந்த டாடா நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.