டாஸ்டாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனுவை எதிர்த்து தேமுதிகவும் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. 

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடந்த 7ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீறியதால், மே 17 வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்யவேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தால், அந்த விற்பனையை ஆன்லைன் மூலம் மேற்கொண்டு, வீடுகளுக்கே டெலிவரி செய்யலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம், வைகோ, அதிமுக கூட்டணி இடம் பெற்றுள்ள பாமக உள்ளிட்ட கட்சிகள் டாஸ்மாக் வழக்கில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. 

இந்நிலையில், டாஸ்மாக் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேமுதிக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதத்தை  கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது முதல்வர் எடப்பாடியை எரிச்சல் அடைய செய்துள்ளது.