சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியதில் டாஸ்மாக்குக்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும் சென்னையிலும் திறப்பது பெரும் தவறு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் செயல்பட்டு வந்த 5,300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு அமலில் இருந்தபோதும், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளின் அடிப்படையில் மே 7ம் தேதி சென்னையை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் 3,700 கடைகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சென்னையில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. இதனால், நாளை முதல் சென்னையில் டாஸ்மாக் திறக்கலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் இன்னும் குறையாத நிலையில் டாஸ்மாக் திறப்பது கண்டத்துக்குரியது என டிடிவி.தினகரன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியதில் டாஸ்மாக்குக்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும் சென்னையிலும் திறப்பது பெரும் தவறு.

யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது என கூறியுள்ளார்.