தமிழகத்தில் மதுக்கடைகளை அரசு நடத்தவில்லை என்றாலோ அல்லது மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டாலே மக்கள் கள்ளச்சாராயத்தைக் குடித்து செத்துப் போவார்கள் என தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 3000 ற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. அரசே மதுக்கடைகளை நடத்தி வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, படிப்படியாக தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட சாத்தியமில்லை என்றும் அப்படி டாஸ்மாக் கடைகளை மூடப்பட்டால் என்ன ஆகும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புது விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் ராஜா காலத்திலிருந்தே குடித்துப் பழகிவிட்டனர், அவர்களால் இனி குடிக்காமல் இருக்க முடியாது. அதனால்தான் அரசே மதுக்கடைகளை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

மதுக்கடைகளை மூடிவிட்டால் மக்கள் எல்லோரும் கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு செத்துப் போவார்கள், அந்த மக்களை காப்பாற்றத்தான் மது விலக்கை அமல்படுத்தாமல் அரசே நடத்தி வருகிறது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புது விளக்கம் அளித்துள்ளார்.