தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகமாக இருந்த காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகளை இயங்கவில்லை . இந்த நிலையில் இன்று முதல் சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான பாதுகாப்புகள் மற்றும் மது வாங்க வருபவர்களுக்கு அறிவுறுத்தல்கள் ஆகியவைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகியதை அடுத்து சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இருப்பினும் சென்னையைச் சேர்ந்த ’குடி’மகன்கள் சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று மது பாட்டில்களை வாங்க செல்கின்றனர். 

இதனையடுத்து சென்னை குடிமக்கள் மாவட்ட எல்லை தாண்டி மதுபாட்டில்கள் வாங்குவதை தவிர்க்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள மதுக் கடைகளில் இருப்பிட முகவரியுடன் கூடிய அடையாள அட்டையை காட்டுபவர்களுக்கே வழங்கப்பட்டன. சென்னையில் உள்ளவர்கள் அண்டை மாவட்டத்திற்கு சென்று மதுபாட்டில் வாங்குவது உறுதி செய்யப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளதால் கெடுபிடிகள் காணப்பட்டன.

 

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டங்களில் பல கடைகளில் ஸ்டாக் இல்லாமல் மதுபானங்கள் விற்றுத் தீர்ந்ததால் கடை திறந்து இரண்டு மூன்று மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. இதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து 40 நாட்கள் மேற்கொண்டு வந்த விரதத்தை கலைக்க இருந்த குடிமகன்களின் பாடு திட்டாட்டமாகி விட்டது. இதனால் குறிப்பிட்ட கடைகள் பூட்டப்பட்டன.