தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை இப்போது திறக்க வேண்டிய அவசியம் என்ன? என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே முழுவதும் விற்று தீர்ந்துவிட்டது. ஆனால், தமிழக அரசின் இந்த முடிவுக்கு கூட்ட அதிமுக கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்கட்சிகள் ஒரேபடி மேலே போய்  போராட்டமே நடத்திவிட்டது.  இந்நிலையில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த மற்றொரு கட்சியான தேமுதிகவும் மதுக்கடை திறப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் ஸ்தம்பித்து உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான அவசியம் என்ன? தமிழகத்தை பொறுத்தவரை வசதியானவர்களை விட வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், நடுத்தர குடும்பத்தினர் மற்றும் கிராமப்புறத்தினர் தான் அதிகமாக உள்ளார்கள்.

பள்ளி, கல்லூரிகள், கோயில்கள், தொழிற்சாலைகள் ஏதும் திறக்கப்படாத நிலையில் யாரும் கேட்காத டாஸ்மாக் கடையை திறக்க என்ன அவசியம். வருமானமே இல்லாத இந்த நேரத்தில் குடும்ப பெண்கள் இருக்கக்கூடிய பணத்தை வைத்து குடும்பத்தை நடத்த திட்டமிடுவார்கள். ஆனால் அந்த பணத்தை மது பிரியர்கள் வன்முறை மூலம் பெற்றுக் கொண்டு மதுக்கடைக்கு செல்லக்கூடிய அவல நிலை ஏற்படும். எனவே அரசுக்கு வருவாய் வேண்டும் என்ற காரணத்திற்காக மதுக்கடையை திறக்கக் கூடாது என பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.