9 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்திருப்பது குடிமகன்களுக்கும் பார் உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் பார்கள் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி மூடப்பட்டது. கடந்த 9 மாதங்களாக டாஸ்மாக் பார்கள் மூடிக்கிடந்ததால், உரிமையாளர்கள் கடும் வருவாய் இழப்பை சந்தித்தனர். இதையடுத்து டாஸ்மாக் பார்களை திறக்க வலியுறுத்தி டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து இன்று முதல் டாஸ்மாக் பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பார்களில் ஏற்படுத்தி இருக்க வேண்டும். முககவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பார்களுக்குள் நுழைவதற்கும், வெளியில் செல்வதற்கும் தனி வழி ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆரோக்கியமான நபர்களையே பணியில் அமர்த்தி இருக்க வேண்டும்.

கழிவறைகளையும், இருக்கைகளையும் அடிக்கடி சுத்தப்படுத்தி வைத்திருக்க வேண்டும். பார்களுக்கு வருபவர்களின் பெயர்கள், செல்போன்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளும் பார் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை உள்பட தமிழகத்தில் பல இடங்களில் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டன.

இருப்பினும் அனைத்து பார்களும் வருகிற 1-ந் தேதி முதல்தான் முழுமையாக செயல்படும் என்று பார் உரிமையாளர்கள் கூறினார்கள். பார்களை சுத்தம் செய்து, கிருமிநாசினிகள் தெளித்து இருக்கைகளை ஏற்படுத்தும் பணிகள் அடுத்த 2 நாட்களும் நடைபெற உள்ளது. புத்தாண்டு முதல் டாஸ்மாக் மதுபார்கள் புதுப்பொலிவுடன் மீண்டும் செயல்பட தொடங்குகிறது. கடந்த 9 மாதங்களாக பார்கள் திறக்கப்படாததால், குடிமகன்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர். தெருவோரங்களில் அமர்ந்து மது குடித்து வந்தனர்.

பலர் சாலையில் குடித்துவிட்டு அங்கேயே விழுந்து கிடந்ததையும் காண முடிந்தது. தற்போது பார்கள் திறக்கப்பட்டுள்ளதால், குடி மகன்கள் உற்சாகமாகி உள்ளனர். புத்தாண்டு பிறக்கும் நிலையில், டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு அனுமதி அளித்திருப்பது பார் உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச்சங்க தலைவர் அன்பரசன் கூறுகையில், ‘’கடந்த 9 மாதங்களாக டாஸ்மாக் பார்கள் செயல்படாததால், அவைகள் செயல்பட்டு வந்த கட்டிடத்திற்கு வாடகை கொடுக்கப்படாமல் உள்ளது. தமிழகம் முழுவதும் 3,250 டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கட்டிடங்களுக்கு வாடகை பாக்கியாக ரூ.405 கோடி இருக்கிறது. இதனை செலுத்துவதற்கு தமிழக அரசு எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

டாஸ்மாக் பார்களை திறக்கக் கோரி பல்வேறு போராட்டங்களையும் நாங்கள் நடத்தினோம். அதே நேரத்தில் அரசுக்கும் கோரிக்கை மனுக்களை அனுப்பி வைத்தோம். அமைச்சர் தங்கமணியை நேரில் சந்தித்தும் பார்களை திறக்கக் கோரிக்கை விடுத்தோம். இதனை ஏற்று பார்களை திறக்க அனுமதி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் தங்கமணிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பார்களிலும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க முடிவு செய்துள்ளோம். சென்னை மண்டலத்தில் 900 பார்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பார்களில் பயன்படுத்துவதற்காக சானிடைசர்கள், உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கும் கருவி ஆகியவற்றையும் வரவழைக்க ஆர்டர் கொடுத்துள்ளோம்.

பார்களை திறப்பதற்கு இன்று (29-ந் தேதி) முதல் அனுமதி அளித்துள்ள போதிலும் 1-ந் தேதியில் இருந்துதான் முழுமையாக பார்கள் செயல்பட உள்ளன. எனவே பார் உரிமத் தொகையை ஜனவரி 1-ந் தேதியில் இருந்தே கணக்கிட வேண்டும். இதனையும் தமிழக அரசு பரிசீலித்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு உதவ வேண்டும்’’ என அவர் கூறினார்.