Tasilthar Balakrishnan suspended for bribe Senthilkumar appointed as new Thalassar
லஞ்சப் புகாரில் கைதான நாமக்கல் தாசில்தார் பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் வருவாய் வட்டாட்சியராக வேலை பார்த்தவர் பாலகிருஷ்ணன். இவர் மணல் கடத்தல் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது சேலத்தை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது லாரியை மடக்கி விசாரித்துள்ளார்.
சின்னத்தம்பியிடம் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் லாரியை விடுவிக்க வேண்டுமென்றால் 10000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளார்.
இதையடுத்து தன்னிடம் இருந்த 5000 ரூபாயை வட்டாட்சியர் பாலகிருஷ்ணனிடம் சின்னத்தம்பி லஞ்சமாக கொடுத்துள்ளார். ஆனால் மீதமுள்ள 5000 ரூபாயை நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து கொடுக்குமாறு கூறி லாரியை சீஸ் செய்தார் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சின்னத்தம்பி புகார் கொடுத்தார். இதையடுத்து பிப்ரவரி 17ம் தேதி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் சின்னத்தம்பியிடம் இருந்து 5000 ரூபாயை லஞ்சமாக பெறும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வட்டாட்சியர் பாலகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். இந்நிலையில், லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய தாசில்தாரராக செந்தில்குமார் என்பவரை நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
