சி.பி.ஐ ரெய்டை தொடர்ந்து அ.தி.மு.கவிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது ஆட்சியை கவிழ்த்துவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பிரம்ம பெயர்த்தனம் செய்து வருவதாக கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்தே அ.தி.மு.கவில் குழப்பம் ஏற்படும் ஆட்சி கவிழும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் காத்து இருக்கிறார். ஆனால் முதலில் சசிகலாவும், பின்னர் தினகரனும், தொடர்ந்து ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இணைந்து அ.தி.மு.கவில் குழப்பம் எதுவும் ஏற்படாமல் ஆட்சியை தொடர வழிவகுத்து வருகின்றனர்.

 

இவர்களில் தற்போது ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் கட்சி மற்றும் ஆட்சிக்கு தலைமை பொறுப்பு வகித்தாலும் ஆட்சி பிரச்சனை இன்றி தொடர இரண்டு பேர் தான் காரணம் என்பது பலருக்கு தெரியாத ரகசியம். அந்த இருவர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி. தினகரனை அ.தி.மு.கவில் இருந்து ஒதுக்குவது என்று முடிவெடுத்த உடனேயே இவர்கள் இருவரும் எடப்பாடியின் தளபதிகள் ஆகினர். எடப்பாடி பழனிசாமி, தங்கமணி மற்றும் வேலுமணி ஆகிய மூன்று பேருமே கவுண்டர்கள் என்பது கூடுதல் தகவல். சொல்லப்போனால் தினகரனை ஒதுக்கும் முடிவே தங்கமணி வீட்டில் வைத்து தான் எடுக்கப்பட்டது.

 

அதன் பிறகு ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அணி இணைப்பிலும் தங்கமணி மற்றும் வேலுமணி முக்கி பங்காற்றினர். அதனை தொடர்ந்து கடந்த ஓராண்டாக டெல்லியுடன் சுமூகமான உறவை மேற்கொண்டு எடப்பாடி அரசுக்கு எந்த பிரச்சனையும் வராமல் பார்த்து வருவதும் தங்கமணி மற்றும் வேலுமணி தான். இந்த நிலையில் தங்கமணி மற்றும் வேலுமணியை குறிவைத்து ஸ்டாலின் தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். என்ன தான் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சுக்கு எதிராக செயல்பட்டாலும் அரசை அசைத்துப் பார்க்க வேண்டும் என்றால் இரண்டு மணிகளையும் அரட்ட வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் தற்போதைய மூவ்.

அதாவது டெல்லிக்கும் – எடப்பாடிக்கும் பாலமாக இருக்கும் வேலுமணி மற்றும் தங்கமணியை ஓரம்கட்டினால் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் நம்புகிறார். அதிலும் தற்போது குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ ரெய்டால் ஒட்டு மொத்த அமைச்சர்களும் ஆடிப்போய் உள்ளனர். இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திடீரென ஊழல் புகார்களை தி.மு.க அவிழ்த்துவிட்டதன் பின்னணியில் ஸ்டாலினின் புதிய மூவ் இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது எஸ்.பி.வேலுமணிக்கு தனிப்பட்ட முறையில் குடைச்சல் கொடுத்தால் அவர் தனது பிரச்சனையை தீர்க்கவே முன்னுரிமை கொடுப்பார், இந்த இடைவெளியை பயன்படுத்தி ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபடலாம் என்பது தி.மு.கவின் பிளான். 

அதிலும் தங்கமணிக்கும் – வேலுமணிக்கும் ஒரே நேரத்தில் குடைச்சல் கொடுப்பது என்பது எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு கைகளையும் கட்டிப்போட்டது போல் ஆகிவிடும் என்று கணக்கு போடுகிறது தி.மு.க. இதன் அடிப்படையில் தான் வேலுமணி, தங்கமணிக்கு எதிராக ஊழல் புகார்களை கூறி தி.மு.க நீதிமன்ற படிகளில் ஏறியுள்ளது. இதன் மூலம் வேலுமணி மற்றும் தங்கமணி கவனத்தை நீதிமன்ற பக்கத்திற்கு திருப்பிவிட்டு ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வேலைகளில் தி.மு.க ஜரூராக இறங்கியுள்ளது.