தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் பதவிக்காலம் 2016 அக்டோபரோடு முடிந்தது. மீண்டும் 2016 அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால்,  நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, தேர்தலை நடத்த அதிமுகவின் தயக்கம் போன்ற காரணத்தாலும், உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பணிகள் நடைபெற்றதாலும் கடந்த மூன்று ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை. செய்யும் பணிகள் போன்ற காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால். உள்ளாட்சி அமைப்புகளில் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. உள்ளாட்சிக்கான நிதி ஒதுக்கீட்டையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துவிட்டது. தொடர்ந்து தனி அதிகாரிகள் மூலமே உள்ளாட்சி நிர்வாகங்கள் நடைபெற்றுவருகின்றன். இந்நிலையில் தேர்தலை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தலை நடத்த நீதிமன்றம் கெடு விதித்தது.
இதன்படி வரும் நவம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நவம்பரில் தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை பெய்யும் என்பதால், அதற்கு முன்பாக நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்தும், தேர்தல் அட்டவணை தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அதை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதை ஆமோதித்திருக்கிறார்.


இதுதொடர்பாக காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையைத் தமிழக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டது. அதனால் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பிறகு, உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.