தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் பிரச்சனையில் அவர்களுக்கு எதிராக  தீர்ப்பு வந்ததில் இருந்தே டி.டி.வி.தினகரனுக்கும் , தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளி விழுந்துவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்றும், தேர்தலை சந்திக்கப் போவதாகவும் தங்க தமிழ்செல்வன் தன்னிச்சையாக அறிவித்தார்.

அப்போதே இருவருக்கும் இடையே ஒரு கேப் விழுந்துவிட்டது. ஆனால் வெற்றிவேல்தான் இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைத்தார். இதையடுத்து யாரும் எதிர்பாராத விதமாக செந்தில் பாலாஜி திடீரென திமுக பக்கம் தாவினார். அப்போதே தங்கமும் அமமுகவைவிட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பெங்களூரு சென்று சசிகலாவைச் சந்தித்த போது தங்க தமிழ்செல்வன் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். வருமானத்துக்கு ஒரு வழியும் இல்லாமல் எத்தனை நாளைக்கு இப்படி சமாளிக்க முடியும் என அவர் பொங்கித் தீர்த்துவிட்டார்.

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக தங்க தமிழ் செல்வனை திமுக பக்கம் இழுக்கும் படலம் தொடங்கியுள்ளது. இதற்காக செந்தில் பாலாஜி போட்ட ஸ்கெட்ச் தற்போது ஒர்க்அவுட் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அதிமுக பக்கம் சென்றுவிடலாமா என யோசித்துக் கொண்டிருந்த தங்கத்தின் மனதை செந்தில் பாலாஜி கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆபரேஷனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தேனி மாவட்ட திமுக சற்று வீக்காக இருப்பதால் அதனை ஸ்ட்ராங் பண்ண தங்க தமிழ்செல்வன் உதவுவார் என ஸ்டாலின் கணக்குப் போட்டுள்ளார்.

எது எப்படியோ தங்க தமிழ் செல்வன் திமுகவில் ஐக்கியமாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.