நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் அதன் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அதிரடியாக ஒரு நிர்வாக சீர்திருத்தம் கொண்டுவர முயற்சித்து வருகிறார். அது என்ன..?

ஆந்திராவுக்கு இனிமேல், அமராவதி, கர்னூல், விசாகப்பட்டினம் என்று,  மூன்று தலைநகரங்கள் இருக்கப் போகின்றன. மத்தியில் உள்ள அமராவதியில் சட்டமன்றம்; மேற்கில் உள்ள கர்னூல் – நீதிமன்றத் தலைநகர்; கிழக்கில் உள்ள விசாகப்பட்டினம் –நிர்வாகத் தலைநகர். நிர்வாக வசதி; அதிகாரப் பரவலாக்கல், நடைமுறை நன்மை என்றெல்லாம் பட்டியல் இட்டு, ‘மிகவும் புரட்சிகரமானது’என்று இந்த ஏற்பாட்டைப் பலரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.  உண்மையில் இது, அப்படி ஒன்றும் புதியதோ புரட்சிகரமானதோ அல்ல.
 
37 ஆண்டுகளுக்கு முன்பாகவே, ஏறத்தாழ இது போன்ற ஒரு திட்டம் தமிழ்நாட்டில் தெரிவிக்கப் பட்டது. ஆனால் அப்போது அந்த யோசனையைக் கிண்டல், கேலி பேசி ஏளனம் செய்தார்கள் அறிவுஜீவிகள். காரணம், யோசனை சொன்னவர் எம்.ஜி.ஆர்.! ’இவருக்கு நிர்வாகத்தைப் பத்தி என்ன தெரியும்..?’ என்று சில ‘நிர்வாகப் புலிகள்’பரப்பி விட்ட புரளி நன்றாக வேலை செய்தது. மிக நல்ல யோசனை, முளையிலேயே கிள்ளி எறியப் பட்டது. இன்று அந்தத் திட்டத்தைப் பற்றி நினைத்தாலும் மனம் புல்லரிக்கிறது. வடக்கு தெற்காக சுமார் 750 கி.மீ. நீளம் கொண்டது தமிழ்நாடு.
 
நமது தலைநகரம் சென்னையில் இருந்து தென்கோடி முனையான கன்னியாகுமரி, சுமார் 720 கிமீ தூரத்தில் உள்ளது. அங்கு வசிக்கும் ஒரு சாமானியன் தலைநகருக்கு வர வேண்டும் எனில் ஒரு நாள் முழுக்கப் பயணித்தால் மட்டுமே வந்து சேர முடியும். நேரம் மட்டுமே அல்ல;  இதற்கு ஆகும் பயணச் செலவுக்கு என்ன செய்வது..? சாமான்யனுக்கு எட்டாத தொலைவில் மாநிலத் தலைநகர் இருத்தல் நியாயம் அன்று; அதனால் தமிழ்நாட்டின் தலைநகரை, திருச்சிக்கு மாற்றலாம் என்று கருதினார் எம்.ஜி.ஆர். நீண்ட கால நன்மையை முன்னிட்டு அவர் தெரிவித்த கருத்துக்கு எதிரான பிரசாரத்தைத் தீவிரமாக முன்னெடுத்தது பிரதான எதிர்க்கட்சி.

தனக்கு முன்பு ஏராளமான பணிகள் இருந்தன; எல்லாமே உடனடியாக நிறைவேற்ற வேண்டியவை. ஆதலால் எதிர்க் கட்சியினரின் பொய்ப் பிரசாரத்துக்கு எதிராகக் களத்தில் இறங்கிப் பணியாற்ற தலைவருக்கு அவகாசம் இல்லாமற் போயிற்று. சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். சொன்ன யோசனை, வேறு வடிவத்தில் இன்று பிரபலமாகி வருகிறது. மதுரை மாநகரம், தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்கப்பட வேண்டும் என்று, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று, முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வருகிறது.

எம்.ஜி.ஆர். தனது மனதில் இருத்தி, செயல் வடிவம் தர இயலாமல் போன திட்டம், தலைநகர் மாற்றம் ஒன்றுதான். இது மட்டும் நிறைவேறி இருந்தால், தென் தமிழகம் எந்த அளவுக்கு அசுர வளர்ச்சி பெற்று இருக்கும்..? காலம் கடந்து நிற்கும் தீர்க்கதரிசனம், எம்ஜிஆரின் தனித்துவம். இதுவே அதிமுகவின் முகவரி. திருச்சி தலைநகரத் திட்டம் போலவே எம்.ஜி.ஆர் மனதில் இருந்த மற்றொரு இலட்சியம் –‘தமிழ் வளர்ச்சி. அறிஞர் அண்ணா தலைமையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு தலைநகர் சென்னையில் 1968ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக நிகழ்ந்தது. மிகவும் கோலாகலமாக நடந்த அந்த விழா இன்றளவும் மகிழ்வுடன் நினைவூட்டப் படுகிறது.

இதுவரை 10 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் தமிழ்நாட்டில் நடந்தவை மூன்று. அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். ஆட்சியில், 1981ஆம் ஆண்டு ஐந்தாவது மாநாடு மதுரையில், ஜெயலலிதா ஆட்சியில் 1995ஆம் ஆண்டு எட்டாவது மாநாடு தஞ்சையிலும் நடைபெற்றன. ஆம். அதிமுக ஆட்சியில் மட்டுமே தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 

ஒரு நியாயமான சந்தேகம் எழலாம். கோவையில் நடைபெற்ற செந்தமிழ் மாநாடு, உலகத் தமிழறிஞர்கள் போற்றும் உலகத் தமிழ் மாநாடு அல்ல. அது சுயவிளம்பரத்துக்காக நடத்தப்பட்ட கூட்டம் என்று சொன்னால் சிலருக்குக் கோபம் வரலாம். மன்னிக்கவும். தனிப்பட்ட யாரையும் குறை சொல்வதல்ல நமது நோக்கம். ஆனாலும் அந்த நிகழ்ச்சி பற்றிய வீடியோ பொதுவெளியில் இருக்கிறது. அவகாசம் இருக்கிறவர்கள் பாருங்கள். பின்லாந்து நாட்டில் இருந்து வந்த அறிஞர் ஒருவருக்கு சாதனையாளர் விருது, யாருடைய பெயரில் வழங்கப்பட்டது என்று பாருங்கள்; போதும். மேற்கொண்டு எதுவும் சொல்லத் தேவையில்லை.மதுரை மாநகரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிலம்புச் செல்வர் பெரியவர் ம.பொ.சி. ஆற்றிய ஆற்றிய முழு உரை, இணையத்தில் கிடைக்கிறது. அவர் கூறிய உண்மைகள் இன்றளவும் மனதைத் தைக்கின்றன. 

தமிழ் இலக்கியங்களில் எங்கேயும் சொல்லப்படாத அளவுக்கு மதுரையில் மக்கள் வெள்ளம் சூழ மாநாடு நடைபெற்றதை விவரித்துச் சொல்கிற தமிழ் ஆசான் மபொசி அவர்கள் அப்படியே போகிற போக்கில் ஒரு செய்தி சொல்லுவார்: “இலங்கையில் இருந்தும் மலேசியாவில் இருந்தும் எதிர்க் கட்சித் தலைவர்கள் இங்கே வந்து இருக்கிறார்கள். காரணம் அவர்களுக்குத் தமிழ்மொழியின் மேல் இருக்கிற உண்மையான அக்கறை; ஆர்வம். இதற்கு மேல் நான் சொல்லப் போவதில்லை”.  

தமிழுக்காக உயிரையே தருவேன் என்று வசனம் பேசியவர்கள் செய்யத் துணியாத மற்றொரு காரியத்தையும் மிகுந்த மனதைரியத்துடன் செய்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர். ‘தொப்புள் கொடி உறவு’என்று நாம் அகமகிழ்ந்து கூறும் இலங்கைத் தமிழர்கள், தமக்கெனத் தனிநாடு கேட்டுத் தீவிரமாகப் போராடிய காலம். அதாவது 1980களின் தொடக்கம். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மாவீரன் பிரபாகரன், தமிழகத்தில் வாழ்ந்த நாட்கள். அவருக்குத் தனது மனப்பூர்வ வாழ்த்துகளை நேரடியாகத் தெரிவித்தார்; தமிழர் போராட்டம் வெற்றி பெற, தமிழ் ஈழம் மலர, எம்.ஜி.ஆர். முழு ஆதரவு நல்கினார். போராட்ட இயக்கங்களுக்கு தன்னாலான நிதி உதவியும் செய்தார்.
 
இன்று கண்ணை மூடிக் கொண்டு எம்ஜிஆரை எதிர்க்கும் யாரும், தமிழ் ஈழத்துக்கு எம்ஜிஆர் தந்த ஊக்கத்தை மறுக்க முடியுமா..?  2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பயங்கரத்தின் போது, இங்கே ஆட்சியில் இருந்தவர்கள் ஆற்றிய ‘தமிழ்த் தொண்டு’எங்கே..? எம்ஜிஆர் நல்கிய ஆதரவு எங்கே..? மனசாட்சி உள்ளவர்கள் பதில் சொல்லட்டும். எம்ஜிஆர் –சாமான்யன் உறவு குறித்த அதிசயிக்கத்தக்க சில விவரங்களைப் பார்ப்போம். அதுதான் அதிமுகவின் ஆதார சக்தி. என்றைக்கும் தொடர்ந்து வருகிற வெற்றிகளுக்கு அடித்தளம் அதுதான். தமிழகத்தின் அரசியல் கட்சிகளில் எப்போதும் முதல் இடம் வகிப்பது அதிமுக. அது எப்படி சாத்தியம்..? அதன் ரகசியத்தைப் பார்ப்போமா..?  

 கட்டுரையாளர்-பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.