நியூயார்க்கில் நடந்துவரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் 27.09.2019 வெள்ளிக்கிழமையன்று உரையாற்றினார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். அப்போது அவர், “யூத ஊடகத்துறை உலகெங்கும் ஆதிக்கம் செலுத்துகிறது. அதுவே ‘இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியப் பயங்கரவாதம்’ என்ற சொல்லாடல்களை உருவாக்கின, பரப்பின. ‘செப்டம்பர் 11 அமெரிக்கத் தாக்குதலுக்கு’ முன்பாக உலகில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர்; அதற்காக அவர்களை ‘இந்து தீவிரவாதிகள்’ என்று கூறுவதில்லை” என்று பேசினார். இது மிகப்பெரிய தவறு மற்றும் அரசியல் அறியாமையாகும்; இதனை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

தமிழீழ வன்னியில் சோசலிச அரசமைத்திருந்த விடுதலைப் புலிகள் மீது இலங்கை சிங்கள அரசுதான் அடாவடி ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது என்பதுதான் வரலாற்று உண்மை. இந்தப் போருக்குத் துணைநின்றதும் உதவியதும் இந்தியா மட்டுமே இல்லை; பாகிஸ்தானும் உண்டு. வல்லரசுகளான அமெரிக்காவும் சீனாவும் கூட உண்டு. மொத்தம் 20 நாடுகள் இதில் உண்டு. ஒவ்வொரு நாடும் கொள்கையளவில் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகும். இருந்தும் யூத ஊடகத்துறையின் ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லாடலுக்குப் பலியாகி, புலிகளை எதிர்த்தன. ஆனாலும் அவை ‘இந்து தீவிரவாதம், பயங்கரவாதம்’ என்ற சொல்லாடல்களை உச்சரிக்கவில்லை. அவ்வளவு ஏன்; அன்றைய பாகிஸ்தான் கூட இந்த சொல்லாடல்களைப் பயன்படுத்தவில்லை. இம்ரான்கானும் அப்படிக் குறிப்பிடவில்லை என்றாலும், தன் பேச்சில் ஒப்பீட்டுக்காகக் கூட விடுதலைப் புலிகளை இழுத்திருக்கத் தேவையில்லை. இது மிகப்பெரிய தவறாகும், அரசியல் அறியாமையின் உச்சமாகும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மட்டுமல்ல, உலகத் தமிழினமே தம் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது.

 

இலங்கை அரசு நடத்திய அடாவடி ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொண்டதில் கூட பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் யாருக்கும் உயிர் சேதம் உள்பட எந்த சேதத்தையும் விளைவிக்காதவர்கள் புலிகள். உலகிலேயே மிகவும் கட்டுப்பாடானது ‘புலிகள் படை’ என்பது வரலாற்றின் பதிவாகும். இதை அறியாமல் அரசியல் குழப்பத்தால் இம்ரான் இப்படிப் பேசியிருக்க வேண்டியதில்லை. இந்தியா மற்றும் அதன் ஆர்எஸ்எஸ்-பாஜக அரசுக்கெதிராக அவருக்கு ஆத்திரம், கோபம் இருந்தால் கூட, அவசரப்பட்டு இந்த வார்த்தைகளை அவர் உதிர்த்திருக்கக் கூடாது. புலிகள் தீவிரவாதிகளுமில்லை, பயங்கரவாதிகளுமில்லை; அவர்கள் “விடுதலைப் போரளிகள், தமிழீழப் படையினர்” என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். புரியவில்லை என்றால் வரலாற்றை அவர் மறுவாசிப்பு செய்ய வேண்டுகிறோம்.

வரலாற்று அறிவோ, அரசியல் அறிவோ கிஞ்சிற்றும் இல்லாதவர்கள் கூட நாடுகளின் உயர் பதவிகளுக்கு வந்துவிடும் ஒரு சூழல் இன்று உள்ளது. அவர்களால் வழிநடத்தப்படும் தேசம் சீரழிவையே நோக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்டவர்களின் வரிசையில் இம்ரானும் இடம்பெறுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!