தமிழ்நாட்டில் வேலையின்மையை அகற்றி, பொருளாதாரத்தில் தமிழகம் உயர்வடைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் வேலையின்மையை அகற்றி, பொருளாதாரத்தில் தமிழகம் உயர்வடைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் மூலம் ஏராளமானவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணி பெற்று கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள பிஎஸ் அப்துர் ரகுமான் கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் சுமார், 500 நிறுவனங்கள் பங்குபெற்றன.

இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், தமிழகம் அனைத்து துறைகளிலும் நம்பர் ஒன் ஆக வளர்ச்சி பெறவேண்டும். தனியார் துறை மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட அனைத்து இளைஞர்களின் கனவுகள் உறுதியாகும். திறமைகளுக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே நம் அரசினுடைய நோக்கம். அனைவருக்கும் கல்வி என்பது அடிப்படை கல்வி மட்டுமல்ல உயர்கல்வி அடைய வேண்டும். அதுதான் அரசின் நோக்கம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும்போது பயிற்சி பெற வேண்டும். இதுதான் எனது கனவு திட்டம். அமைச்சர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

அது என்னவென்றால், இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும். மேலும் முகாம்களில் பங்கேற்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் வைக்கிறேன். தமிழ்நாட்டில் வேலையின்மையை அகற்றி, பொருளாதாரத்தில் தமிழகம் உயர்வடைய வேண்டும். மேலும் பங்கேற்ற இளைஞர்களுக்கு வேலை பெற்றவுடன் மேலும் முன்னேற வேண்டும். வேலை கிடைக்காதவர்கள் சோர்ந்து போகக்கூடாது. கவலை அடையவும் கூடாது. வேலைவாய்ப்பு மீண்டும் கிடைக்க அடுத்த கட்ட முயற்சியை செய்ய வேண்டும். மேலும், இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் நம்பர் ஒன் ஆக வளர்ச்சி பெறவேண்டும் என்ற இலக்கை அடைய அனைவரும் பாடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
