மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருவதையொட்டி டுவிட்டரில் #GoBackAmitShah என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. 

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவருமான அமித் ஷா இன்று தமிழகம் வருகை தந்து அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். திருவள்ளூா் மாவட்டம் தோ்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் உள்பட ரூ.67 ஆயிரத்து 378 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டுகிறார். 

இதற்கான விழா சென்னை கலைவாணா் அரங்கத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. விழாவுக்கு முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறாா். துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். பின்னர், கட்சி நிர்வாகிகளுடன் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருவதற்கு எதிராக டுவிட்டரில் #GoBackAmitShah ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது, #GoBackAmitShah ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி  இந்தியளவில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல், பிரதமர் மோடி தமிழகம் வரும்போது #GoBackmodi ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகும் நிலையில், தற்போது, அமித்ஷா வருகைக்கும் எதிராக #GoBackAmitShah ஹாஷ்டேக் டிரெண்டாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.