குடும்பத்தலைவிகள் பெயரில் தான் இனி நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

குடும்பத்தலைவிகள் பெயரில் தான் இனி நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்ற சகோதரிகள், உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பேற்றிருக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை, பாராட்டுகளை தெரிவித்து, உங்களை அந்த இடத்திற்கு வெற்றிபெற வைத்திருக்கும் அந்த சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளாட்சி அமைப்புகளில் நம்முடைய மகளிர், பெண்கள், சகோதரிகள், தாய்மார்கள் பெரும் வெற்றியைப் பெற்று 50 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற சட்டத்தை நாம் வகுத்து வைத்திருந்தாலும் அதையும் தாண்டி 50 சதவீதத்திற்கு மேல் கிட்டத்தட்ட 60 சதவீத பெண்கள், தாய்மார்கள் இன்றைக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கும் அந்தக் காட்சி 4 ஆம் தேதி நடந்த காரணத்தால் நமக்கு 4 ஆம் தேதியே மகளிர் தினம் வந்துவிட்டது.

அப்படிப்பட்ட நிலையில் ஒவ்வோர் ஆண்டும் மகளிர் தினத்தை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் சார்பில், மகளிர் அணியின் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் நம்முடைய தங்கை கனிமொழி உங்கள் அன்போடு, ஆதரவோடு இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து தலைமை தாங்கி நடத்தித் தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து இதில் பங்கேற்க வைத்திருக்கிறார்கள். அதற்காக முதலில் அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மேயர் என்பது 21 தான். 21 மாநகராட்சிகள் இருக்கிறது. கூட்டணிக்கு ஒரு இடத்தை விட்டுக் கொடுத்து விட்டோம். அது கும்பகோணம் மாநகராட்சி. மீதமிருக்கும் 20 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழக மேயர்கள் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்கள். நாம் நியாயமாக இருந்தால் 50 சதவீதம் மேயருக்கு கொடுக்க வேண்டும். ஆனால் நாம் அந்த 20 பேரில் 11 பெண்கள் மேயர்களாக இன்றைக்கு அமர்ந்திருக்கிறார்கள். துணை மேயர் பொறுப்புகளுக்கு எல்லாம் இட ஒதுக்கீடு கிடையாது.

இட ஒதுக்கீடு இல்லை என்று சொன்னாலும் 6 பேர் துணைமேயர் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார்கள். நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளில் மொத்தமாக 649 இருக்கிறது. அதில் 350 இடங்களில் மகளிர் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். எனவே இது பெரிய சிறப்பு. இதுதான் திராவிட மாடல். 50 விழுக்காடு இடங்கள் மகளிருக்காக ஒதுக்கப்பட்டு இருந்தாலும் அதை விடவும் அதிகமான இடங்களில் பெண்கள் வெற்றி பெற்று வந்து இருக்கிறார்கள். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை நாம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்என்று மாற்றி விட்டோம். இனி அதில் வழங்கப்படும் வீடுகள் அனைத்தும் குடும்பத் தலைவிகளின் பெயர்களில்தான் வழங்கப்படும் என்பதை இந்த கூட்டத்தில் நான் அறிவித்து, பெண்களைச் சொற்களில் போற்றாமல் வாழ்க்கையிலும் போற்றுவோம். பெண்ணுரிமை என்பதைத் தாண்டி, பெண்களுக்கான அதிகாரப் பங்களிப்பை உறுதி செய்வோம் என்று தெரிவித்தார்.