கடந்த 68 நாட்களாக கொரோனா வைரஸ்  நோய்  தடுப்பை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருந்த பொது ஊரடங்கு காரணமாக இயக்கப்படாமல் இருந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை தற்போது இயக்கிட தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதல்களையும், நெறிமுறைகளையும் வகுத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர்  தெரிவித்ததாவது:-  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மேலான ஆணைக்கிணங்க கடந்த 68 தினங்களாக கொரோனா வைரஸ் நோய் தடுப்பை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருந்த பொது ஊரடங்கு காரணமாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்கிட தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதல்களையும் நெறிமுறைகளை வகுத்துள்ளது.  அதனடிப்படையில் பேருந்துகள் இன்று முதல் இயக்குவதற்கு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

60 சதவீத பணிகள் மட்டும் ஒரு பேருந்தில் பயணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 55 இருக்கைகள் கொண்ட புறநகர் பேருந்துகளில் 32 பயணிகளும், 40 இருக்கைகள் கொண்ட மாநகர் மற்றும் நகரப் பேருந்துகளில் 24 பயணிகளும் பயணிக்கவேண்டும். பொதுமக்களின் நலன் கருதி தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இன்று முதல் 6 மண்டலங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் நகரப் பேருந்துகள் 2866 , புறநகர் பேருந்துகள் 2637, மலைப்பகுதி பேருந்துகள் 156 என ஆக மொத்தம் 5 ஆயிரத்து 659 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பணமில்லா பரிவர்த்தனை முறையினை நடைமுறைப்படுத்திட ஏதுவாக பரிசோதனை அடிப்படையில் சென்னையில் அரசு  பணியாளர்களுக்காக தலைமைச் செயலகத்திற்கு இயக்கப்படுகின்ற மாநகர் போக்குவரத்துக் கழக இரண்டு பேருந்துகளில் பேடிஎம் க்யூ ஆர் கோடு முறையில் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து இயக்கம் தொடங்கப்படவில்லை, காரணம் அந்த பேருந்து நிலையத்தில் மார்க்கெட் இயங்கி வருகிறது அதனை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். மேலும் எல்லைப்பகுதிகளில் உரிய பாதுகாப்பான முறையில் பேருந்துகள்  இயக்குவது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் அன்றைய தினம் கூட்டம் நடத்தி முடிவு எடுத்த பின்பு, நாளைய தினம் முதல் பேருந்துகள் இயங்கும். அரசு அறிவித்துள்ளபடி பாஸ் உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தேவையான காட்டன் முகக்கவசம் மூன்றும், தேவையான பாட்டில் வடிவிலான கிருமினாசினியும் வழங்கப்பட்டுள்ளது. பணிக்கு வருகின்ற பணியாளர்கள் வெப்பமானி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே அவர்கள்  பயணத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பேருந்தில் பயணம் செய்யக்கூடிய  பயணிகளுக்கும் வெப்பமானி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

பயணிகள் பின்புறமாக ஏறி முன்புறமாக இறங்கிட வேண்டும், மேலும் பேருந்துகளையும் உள்ளாட்சி அமைப்புக்கு உட்பட்ட பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் நாள்தோறும் இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து  கழகப் பேருந்துகள் இயக்கப்படவில்லை, இவை தவிர மற்ற 6 போக்குவரத்து கழகங்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.