திண்டுக்கல் 

தமிழக கோவில்களில் உள்ள சிலை பாதுகாப்பு பணியை தனியாரிடம் அறநிலையத்துறை ஏன் கொடுக்க கூடாது? என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில், கடந்த 24-ஆம் தேதி வேல் சங்கம ரத யாத்திரை திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தொடங்கியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்று ரதயாத்திரையை தொடங்கி வைத்தார். மொத்தம் ஆறு ரதங்களில் ஆறு வேல்களுடன் யாத்திரை சென்றது.

திருத்தணி, சுவாமிமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற இந்த ரதங்கள் நேற்று மதுரைக்கு வந்தன. அதன்பின்னர் திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு மாலை 6 மணிக்கு மேல் பழனியை ரதயாத்திரை வந்தடைந்தது. 

பழனி பேருந்து நிலையம் அருகே ரதங்கள் வந்ததும், அதில் நின்றபடியே பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார். 

அப்போது அவர், "பழனி முருகன் கோவில் மூலவர் சிலை செய்ததில் மோசடி நடந்துள்ளதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் வெளி உலகுக்கு காட்டியுள்ளார். 

இதேபோல காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலையில் 44 கிலோ தங்கம் மாயமாகி உள்ளது.

தஞ்சை பெரிய கோவிலில் வைக்கப்பட்டிருந்த மன்னர் ராஜராஜன் சிலையும், தஞ்சையை அடுத்த பந்தநல்லூரில் பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சிலைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.300 கோடி மதிப்புள்ள சிலைகளும் மாயமாகி உள்ளன. 

இது, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக சீர்கேட்டையே காட்டுகிறது. சிலை பாதுகாப்பு பணியை தனியாரிடம் அறநிலையத்துறை ஏன் கொடுக்க கூடாது?.

ஆந்திர மாநிலம், திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் தொலைக்காட்சி நடத்தப்பட்டு மக்களிடையே ஆன்மிகம் பரப்பப்பட்டு வருகிறது. 

இதேபோல ஆண்டுக்கு ரூ.200 கோடி வருமானம் உள்ள பழனி மலைக்கோவில் நிர்வாகம் ஏன் தொலைக்காட்சி தொடங்கி திருவாசகம், ராமாயண கதைகளை ஒளிபரப்பி மக்களிடம் ஆன்மிகத்தை பரப்பக்கூடாது" என்று அவர் பேசினார்.