தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-ன் செயலாளர், நக்கீரன் கோபால் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க நீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டது. 

இதையடுத்து, நக்கீரன் கோபால் தனது சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தமிழகத்தில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், இது குறித்து, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பேச்சு, எழுத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும், பத்திரிகை சுதந்திரத்தில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்வதாகவும் கூறினார். 

கரூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தம்பிதுரை எம்.பி. பேசியதாவது: திமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க முயல்கிறார்கள். பாஜகவுடன் மறைமுக தொடர்பில் உள்ளனர். பேச்சு, எழுத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. பத்திரிகை சுதந்திரத்தில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள திமுக மறுக்கிறது இவ்வாறு தம்பிதுரை எம்.பி. கூறினார்.