Tamilnadu Political Chaos theory
ஒரு வண்ணத்துப் பூச்சி சிறகடிப்பதற்கும் எங்கோ ஒரு பூகம்பம் நிகழ்வதற்கும் இடையில் அடிப்படை தொடர்பிருக்கிறது என்பதுதான் கேயாஸ் தியரி!
தமிழக அரசியலில் அப்படியொரு சூழல் உருவாகியுள்ளதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா?...
அனிதா எனும் வண்ணத்துப்பூச்சியின் சிறகொடிந்தததால், தமிழகத்தில் அரசமைக்கும் முயற்சியுடன் ஆடி வந்த பா.ஜ.க. ஆழித்தேரின் அச்சு முறியப்போகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இது சாத்தியமா?...
என்ன சொல்கிறார்கள் விமர்சகர்கள்...”அடியோடு மறுப்பதற்கில்லை இந்த பார்வையை. ஒரு பெரும் அலையின் வீச்சை, ஒரு சிறு புல் தடுத்துவிடுமா? என்று கேட்டால் ‘ஏன் தடுத்துவிடாதா?’ என்று எங்களால் திருப்பி கேட்க முடியும்.

ஈழத்தில் இறுதிகட்டப் போர் உச்சத்திலிருந்த போது தமிழகத்தை ஆண்ட கருணாநிதியின் அரசு கண்டும் காணாது போல் இருந்ததாக குற்றச்சாட்டுகள் வெடித்துக் கிளம்பின. வைகோ, நெடுமாறன், சீமான் போன்றோர் சிறுகுடலும், பெருங்குடலும் தீப்பற்றி எரிய எரிய கூக்குரலிட்ட போதும் மக்கள் மனம் பெரிதாக திரும்பவில்லை. ஆனால் முத்துக்குமார் எனும் இளைஞன் ’என் தொப்புள் கொடி உறவுகளை காப்பாற்று’ என்று பெருங்குரல் எழுப்பியபடி, தன்னை தீ திங்க கொடுத்து ஓடினானே!...அந்த நொடியில் திரும்பியது தமிழகம். அரசியல் சூழல் அடியோடு மாறியது.
ஈழத்தின் பிணக்குவியலை விட தி.மு.க.வின் அலட்சிய பார்வையின் நெடி மிக பெரியளவில் தங்களின் மனதை பிசைவதாக மக்கள் பொங்கினர். அதன் பின் நடந்தவைகளுக்கு இதோ வாழும் சாட்சியாக எதிர்கட்சி வரிசையில் வீற்றிருக்கிறார் நண்பர் ஸ்டாலின் ஆனால் 2011 தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்தையும் தி.மு.க. இழந்து கிடந்தது என்பதை முத்துக்குமாரின் ஆன்மா சுட்டிக் காட்டுவதை கவனியுங்கள் தோழர்களே!

மக்களின் மன கிளர்ச்சிக்கு மிகப்பெரிய தீப்பந்த மெனெக்கெடல்கள் எதுவும் தேவையில்லை. மிக மெலிதாக ஒரு அனல் கீற்று போதும். எப்படி அன்று கருகிக்கிடந்த முத்துக்குமாரை தங்கள் சகோதரனாக, மகனாக இந்த மாநிலம் நினைத்ததோ அல்லது நினைக்கவைக்கப் பட்டதோ அதே நிலைதான் இன்றும். கமல் உள்ளிட்ட மிகப்பெரிய ஆளுமைகளால் மட்டுமில்லை உங்களின் பக்கத்துவீடு பழனிசாமி அங்கிளாலும், என் எதிர்வீட்டு சுகுமாரி அத்தையாலும் அனிதா மகளாகவே பார்க்கப்படுகிறாள். கல்லூரி மாணவர்கள், இளைஞர்_இளைஞிகளின் பார்வையில் ஜல்லிக்கட்டுக்கு அடுத்த தீ பொறியாகவே அனிதா பார்க்கப்படுகிறார்.
’என் கலாச்சாரத்தை தடுக்க நீ யார்?’ என்று எந்த மோடியை பார்த்து எந்த இளைஞர்கள் கேட்டார்களோ, அதே மோடியை பார்த்து இன்று அதே இளைஞர்_இளைஞிகள் ‘என் கல்வி கனவை கலைக்க நீ யார்?’ என்கிறார்கள். இந்த மனப்பான்மை காட்டாறு போன்றது. இந்த அலையை அடக்க பா.ஜ.க.வின் யோசனை செருப்புப் போட்டுக் கொண்டு கிளம்புவதற்குள், இளைஞர்களின் இந்த உத்வேகம் உலகை சுற்றிவிட்டு வந்துவிடும்.
இனி ’அனிதா’ எனும் வார்த்தை எதிர்கட்சி அரசியல் மேடையெங்கும், அறிக்கையெங்கும், போஸ்டரெங்கும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். தகனம் செய்யப்பட்ட அனிதாவின் சாம்பலில் இருந்து பா.ஜ.க.வுக்கு எதிரான விமர்சன மற்றும் லாபி ஃபீனிக்ஸ் பறவைகள் அரசியல் நீர் தெளித்து எழுப்பப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

ஆக இந்த சூழல் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய இடரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் இன்னும் சில காலத்துக்கு சொல் மற்றும் செயல்களில் மிக மிக கவனமாக செயல் பட வேண்டும் பா.ஜ.க. பொன்னார் இப்போது பேசுவது போல், தான் வாய் திறந்து சில விஷயங்களை சொன்னால் சிலருக்கு அப்படியாகிவிடும், சிலர் நிலை இப்படியாகிவிடும் என்று சவடால் விடுவதெல்லாம் சூழலை இன்னமும் உக்கிரமாக்கும் வேலைகள்.
தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட திராவிட அரசியல் இயக்கங்கள் அனிதாவை பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு பிரம்மாஸ்திரமாகவே பயன்படுத்த முயல்வார்கள். இதை முறியடிப்பது வெகு சிரமம் என்பதே தற்போதைய நிலை.
சரி, அனிதாவின் மரணமும், அதைத் தொடரும் அரசியலும் பா.ஜ.க.வுக்கு மட்டும்தான் பின்னடைவா! மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க.வுக்கு பிரச்னை இல்லையா? என்று அசட்டுத்தனமாக கேட்காதீர்கள்....
ஏனென்றால்!...பா.ஜ.க. வீழ்கிறதென்றால் அதனுடன் சேர்ந்து தரையை தழுவுவது அ.தி.மு.க.தானே!
