தமிழக பாஜக தலைவர் போட்டியில் நயினார் நாகேந்திரன் – கருப்பு முருகானந்தம் இடையே கடும் போட்டி நிலவுவதாக சொல்கிறார்கள்.

பாஜக தமிழக தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழக பாஜக தலைவர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக பதவி காலியாகும் அதே நாளில் அதற்குரிய நபர்களை தேர்வு செய்து அறிவிப்பது பாஜக வழக்கம். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை தமிழக பாஜக தலைவர் பதவியை நிரப்ப பாஜக மேலிடம் மிகவும் கவனமாக இருந்து வருகிறது. 

காரணம் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தென் மாநிலங்களில் இருந்து கூடுதல் சீட்டுகளை பெற வேண்டும் என்பது தான். அந்த வகையில் வலுவான மற்றும் மக்களை ஈர்க்கும் சக்தியுடைய ஒருவரை தமிழக பாஜக தலைவராக்க தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள ஜாதியில் இருந்து தலைவரை தேர்வு செய்யவே வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தஞ்சை பட்டுக்கோட்டையை சேர்ந்த தேவர் சமுதாயத்தை சேர்ந்த கருப்பு முருகானந்தத்திற்கு தமிழக பாஜக தலைவராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக பேசிக் கொள்கிறார்கள். தீவிர இந்துத்துவவாதியான இவர் பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பாஜகவை பலம் வாய்ந்த இயக்கமாக மாற்றிக் காட்டியவர். ஆனால் ஏராளமான வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. மேலும் சில சர்ச்சைகளிலும் இவர் பெயர் அடிபடுகிறது.

 

கருப்பு முருகானந்தத்திற்கு பிறகு நயினார் நாகேந்திரனை பாஜக தமிழக தலைவராக்க ஒரு லாபி தமிழகத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. நயினாரும் எப்படியும் பாஜக தலைவராகிவிட வேண்டும் என்று டெல்லியில் முகாமிட்டுள்ளார். அங்குள்ள தனது தொடர்புகள் மூலம் அமித் ஷவை எப்படியும் சந்தித்துவிடுவேன், தமிழக பாஜக தலைவராகிவிடுவேன் என்று தனது ஆதரவாளர்களுக்கு இனிப்பான செய்தியை கூறி வருகிறார். 

இவர்கள் இருவர் தவிர வானதி சீனிவாசனும் இப்போது தமிழக பாஜக தலைவர் ஆகவில்லை என்றால் எப்போதும் ஆக முடியாது என்று கங்கணம் கட்டி பாஜக தலைமையை அணுகி வருவதாக கூறப்படுகிறது. இதே போல் தமிழகத்தில் நிர்மலா சீதாராமனின் வலது கரம் போல் செயல்பட்டு வரும் கேடி ராகவனின் பெயரும் தமிழக பாஜக தலைவர் போட்டியாளர்கள் லிஸ்டில் உள்ளது. அவரும் அந்த பதவியை பிடித்துவிடும் ஆசையில் காய் நகர்த்துவதாக பேசிக் கொள்கிறார்கள். 

இப்படி இவர்கள் நான்கு பேரும் தங்களுடைய சோர்சில் பாஜக தலைவராக  முயன்று வரும் நிலையில் பாஜக தலைமை வேறு ஒரு திட்டத்தில் உள்ளதாக சொல்கிறார்கள். அந்த வகையில் தற்போது பாஜகவின் இளைஞர் அணி அகில இந்திய துணைத் தலைவராக உள்ள ஏபி முருகானந்தத்தை தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்க அக்கட்சி மேலிடம் பரிசீலித்து வருவதாக சொல்கிறார்கள். தமிழகத்தில் இவருக்கு அதிக அறிமுகம் இல்லை. ஆனால் மோடி – அமித் ஷாவின் நம்பிக்கைக்கு உரியவர்கள் பட்டியலில் இவருக்கு நிரந்தர இடம் உண்டு என்கிறார்கள்.

பாஜகவின் தேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராக ஏபி முருகானந்தம் உள்ளார். இதன மூலம் மோடி – அமித்ஷாவிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். மேலும் பாஜக ஆளாத மாநிலங்களில் மிக முக்கியமான கட்சி தொடர்பான முடிவுகளை எடுப்பதில் இவரது பங்களிப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது. இவரைப் போன்ற ஒரு துடிப்பான இளைஞரை தமிழக பாஜக தலைவராக்க வேண்டும் என்று பாஜக மேலிடம் கருதுகிறது.

 

ஆனால் முருகானந்தத்தை தமிழகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டால் நாடு முழுவதுமான போராட்ட திட்டங்கள் உள்ளிட்ட விஷயங்களுக்குசிக்கல் வரும் என்று மோடி – அமித் ஷா கருதலாம். எனவே முருகானந்தம் பெயர் முன்னிலையில் இருந்தாலும் அவர் பாஜக தலைவராக நியமிக்கப்படுவாரா என்கிற கேள்விக்கு மோடி – ஷாவிடம் தான் விடை இருக்கிறது.