ஒருவர் வீட்டை விட்டு வெளியே போ  என்று கூறிய பிறகும் அந்த வீட்டுக்கு செல்வது என்ன தன்மானம் எனத் தெரியவில்லை என்று திமுக - காங்கிரஸ் கூட்டணி பற்றி தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். 
உள்ளாட்சித் தேர்தலையொட்டி திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ‘திமுகவின் செயல் கூட்டணி தர்மத்துக்கு விரோதமானது’ என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்தது திமுகவில் கோப அலைகளை ஏற்படுத்தியது. அதற்கு பதிலடியாக டி.ஆர். பாலு, துரைமுருகன் ஆகியோர் பேச, காங்கிரஸ் தரப்பில் எம்.பி.க்கள் மாணிக்கம்  தாகூர், கார்த்தி சிதம்பரம். ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் பதில் அளித்து பேச திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை அதிகப்படுத்தியது. கூட்டணி உடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இதற்கிடையே திமுக கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பையொட்டி அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் விமர்சனம் செய்துள்ளார். விருது நகரில் அவர் பேசுகையில், “நடிகர் ரஜினி பேசுகிறபோது, யோசித்து நல்லதை மட்டுமே பேச வேண்டும். சிறுபான்மையினருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் குடியுரிமை சட்டத்தை செயல்படுத்துவோம். 
திமுக - காங்கிரஸ் கூட்டணியை பொறுத்தவரை, ஒருவர் வீட்டை விட்டு வெளியே போ  என்று கூறிய பிறகும், அந்த வீட்டுக்கு செல்வது என்ன தன்மானம் எனத் தெரியவில்லை. அதை காங்கிரசார்தான் முடிவு செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங்களில் வென்ற திமுக., தற்போது பின்தங்கியுள்ளது. அப்படியென்றால் இது எங்களுக்கு வளர்பிறை; திமுகவுக்கு தேய்பிறை. ஏற்கனவே அறிவித்தபடி நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் விரைவில் நடைபெறும்.” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.