இந்திய அளவில் நிர்வாகத்திறனில் தமிழகம் தான் மிகச்சிறந்த மாநிலம் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் மூலமாக புலகாங்கிதம் அடைந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. மாநிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. விவசாயம், தொழில் ஆகியவையும் இந்தக் கணக்கெடுப்பில் ஆய்வு செய்யப்பட்டன. 18 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், 11 வடகிழக்கு மற்றும் மலை பகுதி மாநிலங்கள் என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் எந்தெந்த மாநிலங்கள் நிர்வாகத் திறமையில் முதன்மை இடங்களில் உள்ளன என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டது. தேசிய நல்லாட்சி தினம் நேற்று கடைப்பிடிக்கப்படுவதை தொடர்ந்து அந்தப் பட்டியலை மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டது. அதன்படி நிர்வாகத்தில் சிறப்பாக திகழும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. 

சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள் கட்டமைப்பு போன்றவைகளில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. ஆனால் சட்டம் ஒழுங்கு, நிர்வாகத் திறனில் பாஜக ஆளும் மாநிலங்கள் கூட முதலிடத்தை பெறவில்லை. உதாரணத்திற்கு நிர்வாகத் திறனில் இளம் முதலமைச்சர் என்று புகழப்படும் யோகியின் உத்தரபிரதேசம் கூட 17வது இடம் தான். இப்படி இந்திய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை தமிழகம் பெற என்ன காரணம் என்கிற கேள்வி எழுந்தது.

இது குறித்து கோட்டை வட்டாரங்களில் விசாரித்த போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது செயலாளர்களுக்கு கொடுத்துள்ள சுதந்திரம் தான் என்கிறார்கள். அரசுத் திட்டங்கள், கொள்கை முடிவுகள் போன்றவற்றில் முழுக்க முழுக்க அதிகாரிகளின் ஆலோசனைகளைத்தான் எடப்பாடி பின்பற்றுகிறாராம். இந்த விஷயத்தில் ஒப்பந்ததாரர்கள், நெருக்கமானவர்கள் போன்றோரை அருகில் கூட எடப்பாடி விடுவதில்லை என்று சொல்கிறார்கள்.

உதாரணத்திற்கு ஒரே ஆண்டில் ஒன்பது மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழகத்தில் அனுமதி பெற்றதை கோட்டை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அதிகாரிகள் மூலமாக மேற்கொண்ட முயற்சியின் பலனாகவே இதனை சாதிக்க முடிந்தது என்று சொல்கிறார்கள். அதே போல் டிஜிபி நியமனத்திலும் மத்திய அரசின் விதிகளை செம்மையாக தமிழக அரசு பின்பற்றியதாக சொல்கிறார்கள். 

அதோடு மட்டும் அல்லாமல் அமைச்சர்களுக்கும் சுதந்திரமான செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஒவ்வொரு துறையும் புதிய திட்டங்களை எளிதாக செயல்படுத்துவதாக பேசிக் கொள்கிறார்கள். அமைச்சர்கள் – அதிகாரிகள் தமிழகத்தில் இந்த அளவிற்கு நெருக்கமாக இணைந்து பணியாற்றிய காலமே இல்லை என்றும் பேசிக் கொள்கிறார்கள்  கோட்டையில் அமைச்சர்களுக்கு இருக்கும் அதிகாரம் துறை செயலாளர்களுக்கும் இருக்கிறதாம்.

இதனால் நிர்வாகம் சிறப்பாக இருப்பதாகவும், அதுவே மத்திய அரசின் ஆய்வின் மூலம் தெரியவந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். அதன் அடிப்படையில் முதலமைச்சரின் செயலாளர்களான சாய்குமார், விஜயகுமார், செந்தில்குமார், ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் தான் இப்படி ஒரு பெருமை எடப்பாடி அரசுக்கு கிடைக்க முக்கிய காரணம் என்றும் பேசிக் கொள்கிறார்கள். அதனால் தான் உடனடியாக அவர்கள் நான்குபேரையும் அழைத்து எடப்பாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாராம்.