தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீர் பயணமாக விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். அங்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை ஆளுநர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

சென்னையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் இன்று திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் நடைபெற உள்ள வேல்யாத்திரை மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஆளுநர் திடீர் பயணமாக, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். டெல்லி பயணத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்கிறார்.

அதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேல் யாத்திரை, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் உள்ள நிலையில் ஆளுநர் இந்த பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.