நாடுமுழுவதும் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளுக்கான அபராத தொகையை பலமடங்கு உயர்த்தியது மத்திய அரசு. கடந்த 1 ம் தேதி முதல் இது அமல்படுத்தப்பட்டது. 

அதன்படி மது அருந்தி வாகனம் ஓட்டுதல், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் இல்லாமல் செல்லுதல், உரிய வயதுக்கு வராமல் வாகனம் ஓட்டுதல், வாகனங்களின் அதிக வேகம், அபாயகரமாக வாகனத்தை செலுத்துதல், ரேசில் ஓட்டுவதுபோல் செல்லுதல் போன்ற பல குற்றங்களுக்கு அபராத தொகையை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு நிலவி வருகிறது. கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த மறுத்து வருகின்றன. இது மட்டுமில்லாது பாஜக அரசு நடைபெறும் குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அபராத தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் அபராத தொகையை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அம்மாநில துணை முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் தமிழகத்திலும் வாகன விதிமீறலுக்கான அபராத தொகையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

இதுகுறித்து கூறிய போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அபராத தொகை குறைக்கப்படும் என்றும் குறைக்கப்பட அபராத தொகை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதனிடையே வரும் திங்கள்கிழமை அல்லது செவ்வாய்கிழமை அபராத தொகையை குறைத்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிடுவார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மாநில அரசுகள் தங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட நிலையில் அபராத தொகையை குறைத்து கொள்ளலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.