Asianet News TamilAsianet News Tamil

சாதியை ஒழிக்க ஒரே வழி இதுதான்... இதற்கு பாமக ஆதரவு அளிக்கும்... ராமதாஸ் அதிரடி சரவெடி..!

சாதிப் பெயர்களுடன் கூடிய தலைவர்களின் பெயர்கள் பாடநூல்களிலும், இதர ஆவணங்களிலும் அப்படியே நீடிக்க அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் சாதியை ஒழிக்க ஒரே வழி சமத்துவத்தை ஏற்படுத்துவது தான். அதற்கான நடவடிக்கைகளைத் தான் அரசு விரைவுபடுத்த வேண்டும். அந்த நடவடிக்கைகளை பாமக ஆதரிக்கும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

tamilnadu government intention to eradicate castes is to be welcome... ramadoss
Author
Tamil Nadu, First Published Aug 5, 2021, 5:30 PM IST

சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் வரவேற்கத்தக்கது தான் என்றாலும் கூட, இத்தகைய நடவடிக்கைகள் சாதிக்கு பதிலாக அடையாளத்தை தான் அழிக்கும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12-ம் வகுப்பு பொதுத்தமிழ் பாடநூலில் பாட ஆசிரியர் பெயராகவும், சான்றோர் வரலாற்றிலும் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள் பலரின் பெயர்களில் இருந்து சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் வரவேற்கத்தக்கது தான் என்றாலும் கூட, இத்தகைய நடவடிக்கைகள் சாதிக்கு பதிலாக அடையாளத்தை தான் அழிக்கும். 2021-22 ஆம் கல்வியாண்டில் பயன்படுத்துவதற்காக 2020-ம் ஆண்டு அச்சிடப்பட்ட பொதுத்தமிழ் பாடநூலின் திருத்தியப் பதிப்பில், பண்டையக் காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்ற தலைப்பிலான பாடத்தின் ஆசிரியர் பெயர் உ.வே.சாமிநாதய்யர் என்பதிலிருந்து உ.வே.சாமிநாதர் என்று மாற்றப்பட்டிருக்கிறது.

tamilnadu government intention to eradicate castes is to be welcome... ramadoss

அதேபோல், வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யரின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, முதல் தமிழ் நாவலை எழுதிய மாயவரம் வேதநாயகம் பிள்ளை, 'தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா' என்று தமிழரின் தன்மானத்தை உலகுக்கு உணர்த்திய நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை, இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகப் போராளியுமான முத்துலட்சுமி ரெட்டி, இலங்கைத் தமிழ் அறிஞர் சி.டபிள்யூ. தாமோதரம் பிள்ளை உள்ளிட்ட தலைவர்கள், தமிழறிஞர்களின் பெயர்களின் பின்னால் உள்ள சாதிப் பெயர்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், தேசிகர், தீக்ஷிதர் போன்ற சாதிப் பெயர்கள் தமிழ்ப் பாடநூலில் இருந்து நீக்கப்படவில்லை.

தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்களின் பெயருக்குப் பின்னால் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டதற்கு காரணம் சாதி ஒழிப்பாகத் தான் இருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது. சாதியை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை குறை கூற முடியாது; மாறாக வரவேற்கவும், பாராட்டவும் தான் வேண்டும். அது எட்டப்பட வேண்டிய லட்சியமும் கூட. ஆனால், அனைத்து மக்களிடமும் சமத்துவத்தை ஏற்படுத்துவதன் மூலம் தான் சாதியை ஒழிக்க முடியும். அதற்காகத் தான் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்காக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அத்தகைய நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

tamilnadu government intention to eradicate castes is to be welcome... ramadoss

அதை விடுத்து, பாடநூல்களில் இடம்பெற்றிருக்கும் தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்குவது என்பது புரிதல் இல்லாத செயலாகவே தோன்றுகிறது. உ.வே.சாமிநாத அய்யர், வ.உ.சிதம்பரம் பிள்ளை உள்ளிட்டவர்களின் பெயர்களில் உள்ள சாதிப்பெயர் அவர்களின் அடையாளம். உ.வே.சாமிநாதய்யர் என்றால், 'தமிழ்த்தாத்தா' என்ற பெயர் நினைவுக்கு வரும்; அந்தப் பெயர் நினைவுக்கு வந்தால் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை பதிப்பித்தார் என்பது நினைவுக்கு வரும். மாறாக, உ.வே.சாமிநாதர் என்றால், அதே பெயர், அதே முதலெழுத்துகளுடன் வாழ்ந்த ஆயிரக்கணக்கானோரில் ஒருவர் என்று கருதி வருங்கால சந்ததியினர் கடந்து சென்று விடக்கூடும். இது அறிஞர்களின் அடையாளத்தை சிதைக்கும்.

சென்னை மாநகரிலும், தமிழகத்தின் பிற நகரங்களிலும் புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டபோது அவற்றுக்கு நீதிக்கட்சித் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. நீதிக்கட்சித் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆற்காடு ராமசாமி முதலியார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன் சென்னை மாகாணத்தில், மத்திய அரசுப் பணிகளில் 100% இட ஒதுக்கீட்டை வெள்ளையர்களிடம் பேசி வென்றெடுத்து தந்தவர் அவர் தான். ஏ.ஆர்.முதலியார் அல்லது ஆற்காடு ராமசாமி முதலியார் என்பது தான் அவரின் அடையாளம். பல சாலைகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

tamilnadu government intention to eradicate castes is to be welcome... ramadoss

ஆனால், சாதிப்பெயர்களை நீக்குவதாகக் கூறி அவரது பெயருக்குப் பின்னால் இருந்த சாதி பெயரும், முன்னால் இருந்த ஊர்ப்பெயரும் நீக்கப்பட்டதால், பல சாலைகள் ராமசாமி சாலை என்றே அழைக்கப்படுகின்றன. ராமசாமி என்றால் யார் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதனால் எந்த நோக்கத்துக்காக பெயர் சூட்டப்பட்டதோ, அந்த நோக்கம் சிதைந்து விட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நீண்ட காலம் பணியாற்றியவர் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார். அவரது காலத்தில் அந்தப் பல்கலைக்கழகம் முதலியார் பல்கலைக்கழகம் என்றே அழைக்கப்பட்டது. சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் அவர் பணியாற்றினார். எனக்கு வழங்கப்பட்ட மருத்துவப் படிப்புக்கான சான்றிதழிலும் அவர் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார் என்று தான் கையெழுத்து போட்டிருக்கிறார். ஆங்கிலேயர்களே வியக்கக்கூடிய மருத்துவ வல்லுநராகவும், கல்வியாளராகவும் திகழ்ந்த அவரது பெயர் சாலைகளிலும், ஆவணங்களிலும் லட்சுமணசாமி என்று சுருக்கப்பட்டதால் அவரது அடையாளம் அழிந்து விட்டது.

ஆர்.கே.சண்முகம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, சர்.சி.பி.ராமசாமி அய்யர் என, சாதி ஒழிப்பு என்ற பெயரில் அடையாளம் இழக்கச் செய்யப்பட்டவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. அதேபோல், உ.வே.சா அய்யர், வ.உ.சி பிள்ளை உள்ளிட்டவர்களின் அடையாளங்களையும் அழித்து விடக்கூடாது. சாதாரணமானவர்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள சாதிப்பெயர்களை நீக்குவதில் எந்தத் தவறும் இல்லை. சாதனையாளர்களின் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்கள் நீடிப்பதை விதிவிலக்காக அனுமதிக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்றவர்களை எவரும் சாதிக்காக போற்றவில்லை; சாதனைகளுக்காகவே போற்றுகின்றனர். அதனால், அவர்களின் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர் இருப்பதால் சாதி பரவாது.

வட இந்தியத் தலைவர்கள் பெயர்களில் இருந்து சாதிப் பெயர்கள் நீக்கப்படவில்லை. அவர்கள் பானர்ஜி, முகர்ஜி, படேல், மோடி, மேனன், சர்மா, வர்மா, சாஸ்திரி என, சாதிப் பெயர்களை இப்போதும் வைத்துக் கொள்கின்றனர். தமிழகத்தில் சாதனை படைத்த தலைவர்களின் அடையாளம் என்ற வகையிலாவது அவர்களின் பெயர்கள் இப்போது வரை எவ்வாறு அழைக்கப்பட்டனவோ அப்படியே நீடிக்க அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் பெயருக்குப் பின்னால் சாதி பெயரை இட்டுக்கொள்ளும் வழக்கம், ஐம்பதாண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்து விட்டது. அதனால், இனிவரும் காலங்களில் உருவெடுக்கும் சாதனையாளர்கள் / தலைவர்களின் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர் போட வேண்டிய தேவையிருக்காது.

tamilnadu government intention to eradicate castes is to be welcome... ramadoss

ஏற்ககெனவே சாதிப் பெயர்களுடன் கூடிய தலைவர்களின் பெயர்கள் பாடநூல்களிலும், இதர ஆவணங்களிலும் அப்படியே நீடிக்க அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் சாதியை ஒழிக்க ஒரே வழி சமத்துவத்தை ஏற்படுத்துவது தான். அதற்கான நடவடிக்கைகளைத் தான் அரசு விரைவுபடுத்த வேண்டும். அந்த நடவடிக்கைகளை பாமக ஆதரிக்கும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios