உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

ஆனால், அந்த தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என குறிப்பிடாமல் “ஸ்கீம்” என குறிப்பிடப்பட்டிருந்ததால், அதை சுட்டிக்காட்டி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு நழுவியது. மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்தது. மத்திய அரசின் இந்த செயல், தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டும் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 

மத்திய அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ள அதே வேளையில், தமிழக அரசும் நீதிமன்றத்தை நாடியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 6 வார காலத்திற்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.