முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்த வந்த ஆதரவை டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் விலக்கிக் கொண்டதையடுத்து, அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த பரபரப்பான இந்த சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து இன்று சென்னை வருகிறார்.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கடந்த 22–ந் தேதி கிண்டி ராஜ்பவனுக்குச் சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தனித்தனியாக மனு கொடுத்தனர்.  ஆனால் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர்  மும்பைக்கு சென்றுவிட்டார்.

மனு கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரிக்கு சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். தற்போது டி.டி.வி.தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், அரசு பெரும்பான்மையை இழந்துவிடும் என்றும், அதனால் அரசு தொடர்ந்து நீடிப்பதில் பிரச்சினை ஏற்படும் என்றும் அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்..

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், சட்டசபையை உடனே கூட்டவேண்டும் என்றும், அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னைக்கு வருகிறார். சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை பிறப்பிப்பாரா ? என பரபரப்பான தகவல்கள்  பரவியுள்ளன.