கொரோனா வைரஸை காரணம்காட்டி தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் , பன்னாட்டு ராட்சத கப்பல்கள் தமிழர் மீன்பிடி பகுதிக்குள் மீன்களை வேட்டையாடி வருவதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  இத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி அந்த கப்பல்கள் நம் எல்லைக்குள் எப்படி  நுழைந்தது  என்றும் மீனவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே வறுமையில் சிக்கித் தவித்து வரும் தங்களை ஊரடங்கு உத்தரவால் தடுத்து வைத்துள்ள நிலையில்,   இப்படி பன்னாட்டு மீன்பிடி கப்பல்களை தமிழர் மீன்பிடி பகுதிக்குள் அனுமதிக்கலாமா.?  எனக் கேட்டு கொந்தளிக்கின்றனர்.  உடனே அந்த கப்பல்களை  வெளியேற்ற வேண்டும் என மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  இது குறித்து தெரிவித்துள்ள தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் பாரதி கூறியதாவது :- 

கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு மத்திய மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. கடந்த மார்ச் முதல் ஏப்ரல் 15 வரை மீனவர்கள் முழுமையாக கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் பைபர் படகுகள், நாட்டுப் படகுகள் சுழற்சி முறையில் மீன்பிடிக்க அனுமதி தரப்பட்டுள்ளது.  அப்படி சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தில் இருந்து இன்று (18/04/2020) அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றவர்கள் நொச்சிக்குப்பத்தில் இருந்து நேர்கிழக்கே 27° பாயிண்டில் பன்னாட்டு வர்த்தக கப்பல்கள் மீன்பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துள்ளனர்.  

மீன்களின் இனப்பெருக்கக் காலம் என்று கூறி ஏப்ரல் 15 முதல் ஜுன் 15 வரை 60 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளது. ஆனால் அதேகாலகட்டத்தில் பன்னாட்டு வர்த்தக கப்பல்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எப்படி? இந்திய கடலோர காவல்படையை மீறி எப்படி பன்னாட்டு வர்த்தக கப்பல்கள் இந்திய கடல்பரப்புக்குள் நுழைய முடியும்?  பன்னாட்டு நிறுவனங்கள் மீன்களை சூறையாடுவதற்கா  தமிழக மீனவர்களுக்கு 60 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் போடப்படுகிறது? அரசுகளுக்குத் தெரியாமல்இதுஎப்படிசாத்தியமாகும்?

பெரும்பாலான மீன்வளத்தை பன்னாட்டு கப்பல்கள் சூறையாடிவிட்டு சென்ற பிறகு ஜுன் 15-க்குப் பிறகு தமிழக மீனவர்கள் கடலுக்குச் சென்றால் அவர்களுக்கு கிடைக்கப் போவது என்ன? உடனடியாக மத்திய மாநில அரசுகள் இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட பன்னாட்டு வர்த்தக கப்பல்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அந்த நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கடல் நம்முடையது? நிலத்தைப் போல் கூறுபோட்டு விற்பனை செய்ய வேண்டாம்.  இது நம் கடல். இங்கு மீன்பிடிப்பது நம் உரிமை என தென்னிந்திய மீனவர் நலசங்கம் சார்பில் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.