தகுதியான நிறுவனத்திடம் சோதனை கருவிகளை வாங்காத மத்திய , மாநில அரசுகள் மக்களை எப்படி காப்பாற்றும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"1. சீன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட துரித சோதனை கருவியின் அடக்கவிலை ரூ.245. இந்நிறுவனத்திடம் கருவியின் தரத்தை உறுதி செய்து நேரடியாக கொள்முதல் செய்யாமல் வேறொரு விநியோகஸ்தர் மூலம் ரூ.600 விலைக்கு ஐசிஎம்ஆர் ஏன் கொள்முதல் செய்தது?

2. டெல்லி உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டிய விலை உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு ஏற்பட இருந்த இழப்பீடு ரூ.17 கோடியே 75 லட்சம். சோதனை கருவியின் விலையை ஐசிஎம்ஆர் முடிவு செய்வதா? நீதிமன்றம் முடிவு செய்வதா? இதுதான் மோடி ஆட்சியின் இலக்கணமா?

3. ரேபிட் டெஸ்ட் கருவிகளை ஐசிஎம்ஆர் வாங்கிய ஆர்க் நிறுவனத்திடம் வாங்காமல் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாத விநியோகஸ்தரான ஷான் பையோடெக் மூலம் ஒரு கருவி ரூ.600 விலைக்கு தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்தது ஏன்?

4. தகுதியான நிறுவனத்திடம் தரமான சோதனை கருவிகளை வாங்க முடியாத மத்திய, மாநில அரசுகள் கரோனா நோயிலிருந்து 136 கோடி மக்களை எப்படி காப்பாற்றப் போகிறார்கள்?

கடந்த மூன்று மாதங்களாக ஒட்டுமொத்த இந்திய மக்களும் அச்சம், பீதியில் மன உளைச்சலோடு கொடிய கொரோனா தொற்று நோயினால் சிக்கி தவித்து வருகிறார்கள். ஒரு பக்கம் நோயை எதிர்த்து போராடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார பேரழிவில் சிக்கி திணறி வருகிறார்கள். இந்நிலையில், கொரோனா நோயின் பிடியில் சிக்கியிருப்பவர்களை சோதனை செய்ய துரித சோதனை கருவிகளை சீன நாட்டிலிருந்து அதிக விலை கொடுத்துக் கொள்முதல் செய்தது குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று அம்பலப்படுத்தியது. சோதனையான இந்த நேரத்தில் ஈவு, இரக்கமற்ற முறையில் சோதனைக் கருவிகளை கொள்முதல் செய்வதில் கொள்ளை லாபம் சம்பாதிக்க முயன்றிருப்பது நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.

டெல்லி உயர் நீதிமன்ற விசாரணையில் வெளிவந்த தகவலின்படி கொரோனா நோயை உலகுக்கு உற்பத்தி செய்த சீன நாட்டை சேர்ந்த வோண்ட்ஃபோ நிறுவனத்திடம் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை இறக்குமதி செய்வதென மத்திய அரசு முடிவு செய்தது. இந்த கருவியின் இறக்குமதியாளரான மாட்ரிக்ஸ் லேப்-க்கு வரும்போது, விமான கட்டணம் உட்பட, ஒரு கருவியின் உள்ளடக்க விலை ரூ.245 ஆகும். ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஒரு கருவி ரூ.600 என்று 5 லட்சம் கருவிகளுக்கு கடந்த மார்ச் 27 அன்று ஆகிய தேதிகளில் கொள்முதல் ஆணை வழங்கியது.

ஆனால், ஒரு ரேபிட் டெஸ்ட் கருவியை, ரூ.400 என்ற விலையில் ரேர் மெட்டோபோலிக்ஸ் சயின்ஸஸ் என்ற விநியோகஸ்தருக்கு, இறக்குமதியாளரான மாட்ரீஸ் லேப் விற்றுள்ளது. இதனை ஒரு கருவி ரூ.600 என்ற விலையில், ஐசிஎம்ஆருக்கு விற்க ரேர் மெட்டோபோலிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த விலைக்கு மத்திய அரசு ஒப்புதலும் அளித்தது. இதன்படி 2 லட்சத்து 76 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை ஐசிஎம்ஆருக்கு ரேர் மெட்டோபோலிக்ஸ் நிறுவனம் வழங்கியது. மீதமுள்ள 2 லட்சத்து 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வர வேண்டியிருந்த நிலையில், 10 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை விற்பனை செய்ய மெட்டோபோலிக்ஸ் சயின்ஸஸ் நிறுவனம் முடிவு செய்தது. ஐசிஎம்ஆர் வழங்கிய உறுதியின் பேரில் மேலும் 5 லட்சம் கருவிகளுக்கான ஆர்டரை மாட்ரிக்ஸ் நிறுவனத்துடன் ரேர் மெட்டோபோலிக்ஸ் சயின்ஸஸ் நிறுவனம் செய்துகொண்டது.

டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த ஆணையில் ஒவ்வொரு கருவியின் விலையையும் 33 சதவீதம் குறைத்து, அதாவது, ரூ.600-க்கு விற்கப்பட்ட ஒரு ரேபிட் டெஸ்ட் கருவியின் விலை ரூ.400 ஆக குறைக்கப்பட்டது . இதன் மூலம் ஒரு கருவியில் 145 சதவீத கொள்ளை லாபம் தடுக்கப்பட்டுள்ளது. சோதனை கருவியின் விலையை ஐசிஎம்ஆர் முடிவு செய்வதா? நீதிமன்றம் முடிவு செய்வதா? இதுதான் மோடி ஆட்சியின் இலக்கணமா? துரித சோதனை கருவியின் விலை ரூ.245 ஆக இருக்கும்போது இந்திய மருத்துவ அராய்ச்சிக் கவுன்சில் ரூ.600 விலை கொடுத்து வாங்கியது ஏன்? இதனால் ரூ.17 கோடியே 75 லட்சம் மத்திய அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பு மத்திய சுகாதாரத்துறையா? ஐசிஎம்ஆரா? நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லையெனில் முழு பூசணிக்காவை சோற்றில் மறைப்பதைப்போல இந்த ஊழலை மூடிமறைத்திருப்பார்கள்.

தமிழ்நாட்டுக்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை ஐசிஎம்ஆர் வாங்கிய நிறுவனத்திடம் வாங்காமல் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாத விநியோகஸ்தரான ஷான் பயோடெக் அண்ட் டயோக்னோஸ்டிக்ஸ் முலம் ஒரு கருவி ரூ. 600-க்கு கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது ஏன்? அதேபோல மேலும் 4 லட்சம் கருவிகளை ரூ. 24 கோடிக்கு வாங்க கொள்முதல் ஒப்பந்தம் போட்டதை அமைச்சரால் மறுக்க முடியுமா?

அதில் 50 ஆயிரம் கருவிகளை பெறுவதற்கு முதல்கட்டமாக முயற்சியெடுக்கப்பட்டு 24 ஆயிரம் கருவிகளை தமிழக அரசு பெற்றுள்ளது. இதற்கு நேரடியாக பதில் கூறாமல் மற்ற மாநிலங்களின் விலையை ஒப்பிட்டு பேசுவது மடியில் இருக்கிற கனத்தை மூடி மறைப்பதாகும். மிக மிக சாதாரண சோதனைக்கருவிகளை உரிய ஆய்வு செய்து தகுதியான நிறுவனத்திடம் தரமான கருவிகளை வாங்க முடியாத பொறுப்பற்ற மத்திய, மாநில அரசுகள் கொடிய கொரோனா நோயிலிருந்து 136 கோடி மக்களை எப்படி காப்பாற்றப் போகிறார்கள் என்கிற கவலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

இவ்வளவு கூடுதல் லாபம் ஈட்ட அனுமதித்திருக்கலாமா என்ற கேள்விக்கு மத்திய அரசிடம் பதில் இல்லை. இதைப் பற்றி மத்திய அரசு வாய் திறக்க மறுக்கிறது. இப்படி அமைதியாக இருந்தால், கொள்ளை லாபம் ஈட்டிய நிறுவனங்களுக்கு நீங்கள் ஆதரவு அளித்ததாகவோ அல்லது உதவி செய்ததாகவோ பொருள்படும் என்பதை எவராலும் மறுக்க இயலாது" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.