tamilnadu congress committee president will change after pongal said elangovan
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
2016 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டதிலிருந்தே இளங்கோவனுக்கும் திருநாவுக்கரசருக்கும் ஏழாம் பொறுத்தமாகவே இருந்தது.
இருதரப்பினரும் பரஸ்பரம் எதிர்த்துக் கொண்டதை பல நேரங்களில் அப்பட்டமாக காண முடிந்தது. திருநாவுக்கரசரின் பதவிக்காலம் அண்மையில் முடிந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக திருநாவுக்கரசரே தொடர ராகுல் காந்தி கிரீன் சிக்னல் கொடுத்தார். இதையடுத்து அவரும் தலைவராக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இளங்கோவன், தை பிறந்தால் வழி பிறக்கும். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என தெரிவித்தார்.
திருநாவுக்கரசரே மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், முன்னாள் தலைவர் இளங்கோவன் இப்படியொரு கருத்தை தெரிவித்திருப்பது காங்கிரஸுக்குள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
