திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ் பாரதி அவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆ.இ அ.தி.மு.க அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி கண்டித்துள்ளார் .  அதிமுக  ஆட்சியாளர்கள்  மீது ஊழல் புகார் கொடுத்து வருகிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீது இந்த அடக்குமுறை ஏவப்பட்டு இருக்கிறது எனவும் கே.எஸ் அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார் .  திமுகவில் அமைப்புச் செயலாளராகவும்,  மாநிலங்களவை உறுப்பினருமாகவும் இருந்து வருகிறார் ஆலந்தூர் ஆர்.எஸ் பாரதி ,  கடந்த பிப்ரவரி மாதம்-14 ஆம் தேதி சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு . அதாவது தலித் மக்கள் இன்றைக்கு நீதிபதியாக முடிகிறது என்றால் அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சைஎன்று அவர் கூறியிருந்தார். 

 

மேலும்,  இந்தியாவில் தமிழகமே தலை சிறந்த மாநிலமாக இருக்கிறது என்று சொன்னால் அதற்கும் திராவிட இயக்கம் தான் காரணம், வடமாநிலத்தில் இருப்பவர்களுக்கு அறிவு கிடையாது,  ஓபனாக சொல்கிறேன்,  மத்திய பிரதேச ஐகோர்ட்டில் ஒரு  அரிஜன் கூட ஜட்ஜாக கிடையாது,  தமிழகத்தில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் தலித்துகளுக்கு நீதிபதி பதவி கிடைத்தது என கூறியிருந்தார்.  தலித் மக்களுக்கு திமுக போட்ட பிச்சை என கொச்சைப்படுத்தி பேசிய ஆர்.எஸ் பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன .  இந்நிலையில் இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  ஆர்.எஸ் பாரதி கைது நடவடிக்கைக்கு திமுகவின் தோழமை கட்சியினர் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ஆர்.எஸ் பாரதி கைது நடவடிக்கையை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்  அதன் விவரம் :- திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு ஆர் எஸ்  பாரதி அவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் ஆ.இ.அ.தி.மு.க அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். 

கட்சி அரங்குகளில் நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் சர்ச்சையை எழுப்பி, அதையொட்டி அடிப்படை ஆதாரமற்ற பொய் வழக்கை ஜோடித்து கைது செய்திருப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும் ,  கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியாளர்களின் ,  குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்,  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் மீது திரு ஆர்.எஸ் பாரதி லஞ்ச ஊழல் தடுப்பு துறைக்கு பல்வேறு ஊழல் புகார்களை அளித்திருக்கிறார்,  இந்தப் புகார்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஊழலில் ஊறி திளைத்த அதிமுக ஆட்சியாளர்களின் முகமூடிகளை கிழித்தெறிகிறார் , இவரது செயல்பாடுகளை முடக்கி மன உளைச்சல் ஏற்படுத்துவதற்காக இத்தகைய அடக்கு முறை அவர் மீது ஏவி விடப்பட்டிருக்கிறது. பட்டியலின மக்களின் பாதுகாவலனாக தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக அதிமுக அரசு ஆர்.எஸ் பாரதி மீது பொய்வழக்குப் புனைந்திருக்கிறது. ஆதாரமற்ற முறையில் ஜோடிக்கப்பட்ட ஆர்.எஸ் பாரதி மீது தொடுக்கப்பட்ட வழக்கை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.