Asianet News TamilAsianet News Tamil

நெல்கொள்முதல் விதிகளில் தளர்வு வேண்டும்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

நெல்கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

tamilnadu cm stalin wrote letter to pm modi regarding paddy procurement
Author
First Published Feb 5, 2023, 7:01 PM IST

நெல்கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதுக்குறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களை துரிதமாகத் தூர்வாருதல், மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடுதல், விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பு வழங்குதல் போன்று தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் நெல் சாகுபடிப் பரப்பு அதிகரித்து, குறுவைப் பருவத்தில் 4.19 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் 16.43 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவு, சம்பா/ நவரை பயிரின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் நெல் அறுவடை செய்யத் தயாராக இருந்த நேரத்தில், துரதிஷ்டவசமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால், சுமார் ஒரு இலட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன என்று ஆரம்ப மதிப்பீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சேலை வாங்க கூடிய கூட்டம்.! நெரிசலில் சிக்கி 4 பேர் பலி.! திமுக அரசே பொறுப்பு- ஸ்டாலினை விமர்சிக்கும் இபிஎஸ்

வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, அறுவடைப் பணியை மீண்டும் தொடங்கிடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் நிலையில், தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பத அளவு மிக அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடந்த காலங்களில், குறுவை பருவத்தில், பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின்கீழ், மாநில கொள்முதல் முகமையான, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், நெல் கொள்முதலில் ஈரப்பதம் குறித்த விதிமுறைகளைத் தளர்த்த ஒன்றிய அரசு அனுமதி அளித்தது.

இதையும் படிங்க: எடப்பாடிக்கு என்ன பொறுப்பு.? உச்சநீதிமன்ற உத்தரவு எங்கே.? கடுப்பான ஓபிஎஸ் - குழப்பத்தில் அதிமுகவினர்!

பருவம் தவறிய இந்த மழையின் தற்போதைய சூழ்நிலையில், கொள்முதல் ஈரப்பதத்தில் அதேபோன்ற தளர்வு தேவைப்படுகிறது. அதன்மூலம் நெல் கொள்முதல் பணிகளைச் சீராக செய்து முடிக்க இயலும். எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சியடையாத, சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதம் வரை தளர்த்தவும், சேதமடைந்த, நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதம் வரை  தளர்த்தவும், தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios