தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு  துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக  உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,   தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய மொத்த பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை அரசு தரப்பில் 42ம் தனியாரிடம் 28, என மொத்தம் 70 பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த 70 மையங்களில் நாளொன்றுக்கு 12 ஆயிரத்திற்கும் குறையாமல் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கான பிரத்தியேகமாக  23அரசு மருத்துவமனைகள் இயங்கிவருகின்றன. கொரோனா சிகிச்சைக்காக தனிப்பட்ட பிரிவுகள் கொண்ட அரசு மருத்துவமனைகள் 188 பயன்பாட்டில் இருக்கின்றன. கொரோனா சிகிச்சைக்கான தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகள் கொண்ட தனியார் மருத்துவமனைகள் 169 செயல்பட்டு வருகின்றன. மொத்த தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை 35ஆயிரத்து 646.

தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை 4018 என தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை தமிழகத்தில் பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 4 லட்சத்து 55 ஆயிரத்து 716, இதுவரை நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 372 ,  தீவிர கண்காணிப்பில் உள்ளவர்கள் 89 ஆயிரத்து 82 பேர் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.  இதுவரை 10 ஆயிரத்து 548 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து  வீடு திரும்பி உள்ளனர் எனவும்,  இது 54. 45% எனவும் தெரிவித்துள்ள அவர் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 எனவும்,  இது 0. 75% எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு எவ்வித தடையும் இன்றி கிடைக்கக் கூடிய சூழ்நிலையை அரசு உருவாக்கி உள்ளது என தெரிவித்த அவர்,  இன்றைக்கு காய்கறிகள் மக்களுக்கு எந்த பகுதிகளிலுமே எளிதாக கிடைக்கக்கூடிய சூழ்நிலையை நம்முடைய வேளாண்துறை அதிகாரிகள் செய்திருக்கின்றனர். உள்ளாட்சித் துறை அதிகாரிகளும் இணைந்து இதனை செயல்படுத்தியதன் விளைவாக,  காய்கறி விலை ஏறாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. வேளாண் பணிகள் எவ்வித தடையும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

அதே போல் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையில்லாமல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்றன,  இன்றைக்கு காய்கறி விலையை நான் குறிப்பிட விரும்புகிறேன் என்ற முதலமைச்சர்,  தக்காளி ஒரு கிலோ 8 ரூபாய்,  உருளைக்கிழங்கு 23 ரூபாய்,  பெரிய வெங்காயம் பத்து ரூபாய், கத்தரிக்காய் வெண்டைக்காய் முள்ளங்கி தலா 20 ரூபாய்,  பாகற்காய் கேரட் 20 ரூபாய், அவரை , பச்சை மிளகாய், பீட்ரூட் 35 ரூபாய் என மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகவே அரசு விலை உயராமல் பார்த்துக் கொள்கிறது.  பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக கிடைக்க அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு அவர்கள் இருக்கின்ற பகுதிக்கு நம்முடைய அதிகாரிகள் அத்தியாவசியப் பொருட்களை கொண்டுசென்று சேர்க்கின்றார்கள். அரசு அதையும் ஏற்பாடு செய்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஊரடங்கு காலத்தில் இதுவரை  கட்டுப்பாடுகளை மீறியதாக சுமார் 5  லட்சத்து 8 ஆயிரத்து 263 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 618 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4 லட்சத்து 27 ஆயிரத்து 689 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மொத்தம் 8.36 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது,  ஆக அரசு துரிதமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது முதல் இன்று வரை நம்முடைய மாவட்ட ஆட்சித்தலைவர்கள், நான் குறிப்பிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள்,  காவல்துறை அதிகாரிகள்,  ஒருங்கிணைந்து செயல் பட்டதன் விளைவாக இன்று தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை நாம் கட்டுக்குள் வைத்திருக்கின்றோம்.  அதிகமான பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.  அதனால் நோய் அறிகுறிகள் தென் பட்டவர்களை அதிகமாக கண்டறிய முடிகிறது. எந்த அளவிற்கு நாம் பரிசோதனைகளை செய்கிறோமோ, அந்த அளவிற்கு கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்பொழுதுதான் நோய் பரவலை தடுக்க முடியும். சிலர், நோய் பரவலை தடுக்க அரசு தவறிவிட்டது என்ற ஒரு தவறான குற்றச்சாட்டு சொல்கிறார்கள்.  அரசைப் பொறுத்த வரைக்கும் நோய் பரவலை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கொரோனா எளிதாக பரவக்கூடிய தொற்று நோய் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்த நோய் பரவலை முழுமையாக தடுக்க வேண்டும் என்று சொன்னால் பொதுமக்களுடைய ஒத்துழைப்பு மிகமிக முக்கியம். பொதுமக்களுடைய ஒத்துழைப்பு இருந்தால்தான் நோய்ப்பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். அதேபோல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது முதல் இதுவரை சிறப்பான முறையில் செயலாற்றி வருகின்றன தலைமைச் செயலாளர்,  காவல்துறை அதிகாரிகள், பல்வேறு துறைகளைச் சார்ந்த செயலாளர்களுக்கும்,  அதிகாரிகளுக்கும்,  அரசு ஊழியர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.