தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு  துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக  உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக இதுவரை 6 முறை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன், ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் செயல் பட்டதன் விளைவாக இன்றைக்கு வைரஸ் பரவல் பெருமளவில் தடுக்கப்பட்டிருக்கிறது.  இன்றைய சூழ்நிலையில் இந்தியா முழுவதும் இந்த வைரஸ் பரவல் அதிகரித்திருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமாகவும், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமாகவும் ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமாகவும் ஏற்பட்டுள்ள தொற்று படிப்படியாக  குறைக்கப்பட்டாலும்,  நமது சென்னை ஒரு சவாலாக உள்ளது.

சென்னை மாநகரம் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம்,  குறுகலான தெருக்கள்அதிகமாக இருக்கின்றன,  நெரிசலான வீடுகள் அதிகமாக இருக்கின்றன, ஒரே வீட்டில் பலர் வசிக்கின்றனர். இருந்தாலும் அதை கட்டுப்படுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்த முயற்சியின் காரணமாக இந்த வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் இருக்கின்றது.  வல்லரசு நாடுகள், வளர்ந்துவரும் நாடுகளில் கூட உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது, ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை நம்முடைய மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையிலே சிகிச்சை அளித்த காரணத்தினாலே, இறப்பு விகிதம் குறைந்து இருக்கின்றது. அதோடு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 54 சதவீதமாக இருக்கின்றது. இதனால் நாம் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை இருந்தாலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதற்கு ஒரே மருந்து ஒவ்வொருவரும் தன்னுடைய கடமையை உணர்ந்து அரசு சொல்லுகின்ற வழிமுறைகளை பின்பற்றினால் இந்த வைரஸ் பரவலை தடுக்க முடியும். பொதுமக்களுடைய ஒத்துழைப்பின் மூலமாகத்தான் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். 

பொது மக்களுடைய ஒத்துழைப்பு மிகமிக முக்கியம். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை, மருந்து கண்டுபிடித்து இருந்தால் எளிதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து குணமடைய செய்ய முடியும். ஆனால் மருந்து கண்டுபிடிக்காத இந்த சூழ்நிலையில் நம்முடைய மருத்துவர்களின் கடும் முயற்சியின் காரணமாக உரிய  முறையிலே பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததன் காரணமாக குணமடைந்து வீடு திரும்புகின்ற காட்சியை நாம் பார்க்கிறோம்.  ஆகவே பொதுமக்கள் ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் அப்படி கட்டுப்பாட்டோடு இருந்தால்தான் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும்.  மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதல்படி அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.  அதை மக்களுக்கு எடுத்துச் சொல்கிறோம்,  விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு,  ஒலிபெருக்கியின் மூலமாக அனைத்து வீதிகளிலும் காவல்துறையினர், உள்ளாட்சித் துறையினர் பணி செய்து வருகின்றனர்.  பொதுமக்கள் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். வெளியே சென்று பொருட்களை வாங்குகின்ற போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியே சென்று மீண்டும் வீடு திரும்புகிற போது கை கால்களை சோப்புப் போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். 

 இதையெல்லாம் பின்பற்றினால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும்.  அதேபோல் நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.  நோய் முற்றிய பிறகு நீங்கள் மருத்துவமனையில் சேர்ந்தால் சிகிச்சை பலனின்றி போய்விடும். ஆகவே பொதுமக்கள் நோய் அறிகுறிகளான இருமல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை வந்தாலோ சளி ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்து தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.  இது மிக முக்கியம்.  அப்படியிருந்தால் இந்த வைரஸ் தொற்றிலிருந்து அவர்கள் மீள முடியும் எனக் கூறியுள்ளார்.