வெளிநாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் வேறு நாடுகளுக்கு செல்வதாக வந்த தகவலின் அடிப்படையில் அந்த தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் . ஊரடங்கு குறித்து  நேற்று பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுக்கு உரையாற்றினார் அப்போது பேசிய அவர், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதிகாரிகள் மிக சிறப்பான முறையில் பணியாற்றியதன் விளைவாக மாநிலத்தில்  பெருமளவில்  வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, தமிழகத்தில் இந்த வைரஸ் முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து பின்னர் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது இது மீண்டும் குறைந்து கட்டுப்பாட்டுக்கு வரும் ,  வெளிநாடுகளிலும் அப்படித்தான் இந்த வைரஸ் ஆரம்பத்தில் சிறிய அளவில் பரவி இடையில் உச்சத்தை அடைந்து பின்னர் கட்டுபாட்டுக்குள் வந்தது,  அதேபோலத்தான் இந்தியாவிலும் தமிழகத்திலும் மிக வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். 

இந்த வைரசை கட்டுப்படுத்த அரசு எத்தனை நடவடிக்கைகளை எடுத்தாலும் இந்த வைரசை முழுவதுமாக  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது பொதுமக்களின் கையில்தான் உள்ளது ,  அரசு அறிவுரைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் ,  அதேபோல மக்களிடமும் அதிகாரிகள் முறையாக இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றார் . மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு  தேவையான ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது . குறிப்பிட்ட தேதியில்  குறிப்பிட்ட நேரத்திற்கு ரேஷன் கடைகளுக்கு சென்றால் உங்களுக்கான பொருட்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் ,  தமிழகத்தைப் பொறுத்தவரையில் உணவு பஞ்சம் என்ற பிரச்சினைக்கே இடமில்லை என்றார் .    அரசு மிக கவனமாக நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் மிகவனமாக இருக்கிறது .  தமிழகத்தில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது .  வெளிநாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் வேறு நாடுகளுக்கு செல்வதாக வந்த தகவலின் அடிப்படையில் அந்த தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு இறங்கியுள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் . 

அதாவது சீனாவை தளமான கொண்டு இயங்கி வந்த அமெரிக்கா மற்றும் இத்தாலி பிரான்ஸ் ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களும் ,  அதேபோல்  பிரிட்டனுக்கு சொந்தமான பல நிறுவனங்களும் சீனாவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளன . இந்நிலையில் சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப் பெரும் சந்தையாக கருதப்படும் இந்தியாவில் காலூன்ற அந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன .  இந்நிலையில் அந்நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்கும் பட்சத்தில் ,நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும் , தொழில் வளம் அதிகரிக்கும் எனவே  இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த சில ஆண்டுகளில் பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது எனவும் உலகப் பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர் . இதை மேற்கோள் காட்டியுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,  இந்தியாவில் கால்பதிக்க உள்ள நிறுவனங்களை குறிப்பாக தமிழகத்திற்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்  கூறியுள்ளார் .  இது தமிழக இளைஞர்களுக்கு உற்சாகமூட்டும் செய்தியாக அமைந்துள்ளது .