கொரோனா பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ள ஏதுவாக தமிழகம் முழுவதும் சுமார் 2000  அம்மா மினி கிளினிக்குகள் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். ஏற்கனவே இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டிருந்த நிலையில் இன்று காலை சென்னை ராயபுரத்தில் ஷேக் மேஸ்திரி தெருவில்  அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் 200 மினி கிளினிக்குகள் அமைய உள்ள நிலையில், முதற்கட்டமாக 47 இடங்களில் இது அமைக்கப்படுகிறது, 20 இடங்களில் இன்று முதல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மினி கிளினிக்குகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.  கிராமப்புறங்களில் மட்டும் மாலை 7 மணி வரை திறந்திருக்கும், இதில் ஒரு டாக்டர், ஒரு நர்சு ஒரு மருத்துவ பணியாளர் இருப்பர். இங்கு காய்ச்சல்,தலைவலி போன்ற எளிதான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், கொரோனா உள்ளதா என்பதையும் கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு நோயாளிகள் அனுப்பிவைக்கப்படுவர். 

முதல்வர் அறிவித்த 2,000 மினி கிளினிக்குகளில் முதல் கட்டமாக 630 மினி கிளினிக்குகள் இன்று தொடங்கப்படுகின்றன. சென்னையில் முதல் கட்டமாக 47 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன. கிராமப்புறம் 1,400, சென்னையில் 200, நகர்ப்புறங்களில் 200, நகரும் கிளினிக்குகள் 200 அமைக்கப்படுகின்றன.  இந்த கிளினிக்குகளில் கூடதலாக  ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, மகப்பேறு, ஹீமோகுளோபின் பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. வரும் 16 ஆம் தேதி சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள 40 மினி கிளினிக்குகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.