முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைத்து பராமரிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விடுத்த கோரிக்கைக்கு தமிழக முதல்வர் பழனிசாமி பதிலளித்து கடிதம் எழுதியுள்ளார். 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. அதனால் கேரளா முழுவதுமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. மீட்புப்பணிகளும் நிவாரணப்பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

கனமழை பெய்துவருவதால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து, உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த அணையின் பராமரிப்புப் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருவதால், நீர்மட்டத்தை 139 அடியாக குறைத்து பராமரிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.

இதுதொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்த முதல்வர் பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். 

அதில், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. முல்லை பெரியாறு அணையில் 142 நீர் தேக்கப்படுவதால் அணையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கிடையாது. முல்லை பெரியாறு அணையிலிருந்து அதிகபட்ச நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவை கண்காணிக்க தமிழக அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.