தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கும்போது, பேருந்து கட்டணத்தை உயர்த்த அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வேலையில் பேருந்து கட்டணம் உயர்வு என்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சில தளர்வுகளை செய்யப்பட்டதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், குவார்ட்டர் ஒன்றுக்கு 20 ரூபாய் வரை விலை அதிகமாக விலையை ஏற்றியுள்ளது.

ஊரடங்கால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் எல்லாம் குறைந்துள்ள வேளையில் பல விலையேற்றங்களை அறிவித்துள்ளது. சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது மட்டும் டாஸ்மாக் மது வகைகளின் விலையையும் ஏற்றியது. மேலும், அரசு ஊழியர் ஓய்வு வயது உயர்வு என, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  ஊரடங்குக்குப்பின் 50 சதவீத பேருந்துகள் சமூக இடைவெளியில் போக்குவரத்து தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டு, தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தொழிலாளர்களுக்கான சம்பளம் 450 கோடி தேவைப்படுகிறது. வருவாய் இழப்பால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய  ஊரடங்கு முடிந்து பேருந்து போக்குவரத்து துவங்கும் போது, பேருந்து கட்டணத்தை சற்று உயர்த்தவும், அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேருந்து கட்டணத்தை உயர்த்தும் பட்சத்தில், அவர் ஆட்சி செய்த 4 வருடத்தில் 2வது முறையாக பேருந்து கட்டணத்தை உயர்த்திய ஒரே முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.